கொரோனா பாதித்தவர்களின் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி ஏராளமான ஆய்வு முடிவுகளை ‘லான்செட் ஜர்னல்’ வெளியிட்டிருக்கிறது. அதில் வெளியாகியிருக்கும் சமீபத்திய ஆய்வுத் தகவல் ஒன்று, ‘கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 72 சதவீதம் பேர் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக’ கூறுகிறது. இந்த மனஅழுத்தம் நோயாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனஅழுத்தத்தின் அளவு ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. அதே நேரத்தில் நோயில் இருந்து மீண்டதும், பெரும்பாலானவர்கள் மனஅழுத்தத்தில் இருந்தும் விடுதலையாகிவிடுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தீவிரமான மனஅழுத்தத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள். அதில் இருந்து அவர்கள் விரைவாக மீண்டுவிடவேண்டும். இல்லாவிட்டால் அதுவே பல்வேறுவிதமான மனநோய்களை உருவாக்கி எதிர்காலத்தை சிக்கலுக்குள்ளாக்கிவிடும். ஒரு சிலருக்கு தற்கொலை எண்ணமும் தோன்றலாம். அப்படிப்பட்டவர்கள் கவுன்சலிங் மற்றும் சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளவேண்டும். ‘கொரோனா ஒரு நோய்தான். சரியான சிகிச்சையால் அதில் இருந்து பரிபூரணமாக குணமடைந்துவிடமுடியும்’ என்ற நம்பிக்கையை மனதில் விதைத்தால், அவர்களது மனநலம் மேம்பட்டுவிடும்.
கொரோனாவை பற்றிய விஞ்ஞானபூர்வமான தகவல்களைவிட கட்டுக்கதைகள் சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக உருவாகின்றன. இதனால் கூடுதல் அறிவை பெற்றுவிடுவதாக நினைத்துக்கொண்டு பலரும் குழப்பமான தகவல்களையே பெறுகிறார்கள். மனோரீதியான பலம் இல்லாதவர்கள் கொரோனா பற்றிய கட்டுக்கதைகளை படித்துவிட்டு, அது பற்றியே அடுத்தவர்களிடம் பேசிப்பேசி புலம்புகிறார்கள். கொரோனா குறித்தும், அது பரவும் விதம் குறித்தும், அதற்கான தற்காப்பு முறைகள் குறித்தும் கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்துவிட்டது. இனியும் மூச்சுக்கு மூச்சு கொரோனா பற்றி பேசிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு முறை களை மட்டும் கடைப்பிடித்துக்கொண்டு அவரவர் வேலைகளை செய்துகொண்டிருந்தால் போதுமானது.
வேறு எந்த நோய்க்கும் இல்லாத சிக்கல் ஒன்று கொரோனாவுக்கு ஏற்பட்டிருப்பதை மனோதத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பிட்ட தெருவில் ஒரு கொரோனா நோயாளி இருந்தால், அந்த தெருவில் உள்ள அனைவரது பார்வையும் அவரை நோக்கித் திரும்புகிறது. ஒருசிலர் அவரை உற்றுக்கவனிப்பது அவருக்கு உறுத்தலை ஏற்படுத்தி குற்றஉணர்ச்சியை ஏற்படுத்துவதாக மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். அந்த குற்றஉணர்ச்சியால் உலகின் பலபகுதிகளில் உள்ள மக்கள் தற்கொலை முயற்சிவரை சென்றுள்ளதாகவும், மனோதத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். கொரோனா தனக்கு ஏற்பட்டதை அவமானமாக எடுத்துக்கொண்டவர்களும், அதனால் ஏற்பட்ட குற்றஉணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தியாவிலும் உண்டு. அதனால் இந்த நோயை பற்றி வெளியே சொல்லாமல், தனக்குள்ளே மூடிமறைத்து முற்றிய பின்பு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தவர்களும் உண்டு.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பத்து சதவீதம் பேர் குற்றஉணர்ச்சியால் பாதிக்கப்படுவதாக உலகளாவிய புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சில குடும்பத்தினர், கொரோனா நோயாளிகளை பார்த்து, ‘உன்னால் நமது குடும்பத்திற்கே கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. நீ கவனமாக இருந்திருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது’ என்றெல்லாம் தேவையற்ற பேச்சுக்களைப் பேசுவதன் மூலம் கொரோனா நோயாளிகள் அதிக குற்றஉணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.
கொரோனாவால் கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட காலகட்டத்தில் டெலிவிஷன் தொடர்களின் படப்பிடிப்பு தடைபட்டிருந்தது. அதனால் புதிய தொடர்கள் எதுவும் குறிப்பிட்ட காலம் வரை ஒளிபரப்பாகவில்லை. ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களை பார்த்து பொழுதுபோக்கிக் கொண்டிருந்த முதியோர்கள் புதிய தொடர்களை பார்க்க முடியாமல் இருந்த சமயத்தில் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கொரோனா பீதியும் சேர்ந்து அவர்களை மிகுந்த கலக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறது. புதிய தொடர்கள் ஒளிபரப்பான பிறகே அவர்கள் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பியிருக்கிறார்கள் என்றும் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.