Breast-Cancer-Treatment-and-conditioning_மார்பக புற்றுநோய் சிகிச்சையும், சீரமைப்பும்

மார்பக புற்றுநோய்: சிகிச்சையும், சீரமைப்பும்

by admin

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த மாதத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், நோய் தடுப்பு கருத்தரங்குகளும் அதிகளவில் நடத்தப்படும். அப்படி இருந்தும் பெண்களிடம் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது என்கிறார், மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன். சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த மார்பக சீரமைப்பு நிபுணரான இவர், புற்றுநோய்க்கு பிறகான மார்பக பராமரிப்பு வழிகாட்டுதல்களை யூ-டியூப் வாயிலாகவும், பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாகவும் வழங்கி வருகிறார். அவர் மார்பக புற்றுநோய் அறிகுறிகள் பற்றியும், சிகிச்சை முறை பற்றியும், சிகிச்சைக்கு பிறகான பராமரிப்பு பற்றியும் விளக்கமாக பேசுகிறார்.

* மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இருக்கிறதா?

கடந்த 3 ஆண்டுகளைவிட, விழிப்புணர்வு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுவதால், அந்த காலத்தில் நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். பொது இடங்கள், அலுவலகங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகளில் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருவதால், போதிய விழிப்புணர்வு இருக்கிறது.

* எதனால் விழிப்புணர்வு குறைகிறது?

கூச்ச சுபாவம், பயம் போன்ற காரணங்களால் மார்பக புற்றுநோய் பற்றி பிறரிடம் பேசுவதில்லை. மேலும் மார்பகங்களில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை குடும்ப பெண்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அதை பெற்றோரிடமும், கணவரிடமும் பகிர்ந்து கொள்வதும் இல்லை.

* மார்பக புற்றுநோயை எப்படி கண்டறிவது?

யூ-டியூப் தளத்தில் ‘பிரஸ்ட் கேன்சர் எக்சாமினேசன் அட் ஹோம்’(Breast Cancer Examination at home) என்று தேடிப்பார்த்தால் நூற்றுக்கும் அதிகமான வீடியோக்கள் வரும். அதில் மார்பகங்களை எப்படி வீட்டிலேயே பரிசோதிப்பது என்பதை வீடியோவாக விளக்கி இருப்பார்கள். அதை பின்பற்றி மாதம் ஒரு முறை மார்பகங்களை வீட்டிலேயே பரிசோதித்து பாருங்கள். மார்பகம், அக்குள் போன்ற பகுதிகளில் ‘கட்டி’ இருக்கிறதா?, அவை வலியை உண்டாக்குகிறதா? என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெறுங்கள்.

* பயப்படவேண்டிய அவசியம் உண்டா?

முடிந்தவரை ஆரம்பநிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், மார்பக புற்றுநோயை எளிதில் குணப்படுத்தலாம். கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற பல சிகிச்சைகள் மூலம் ஆரம்பநிலை நோயிலிருந்து குணம் பெறலாம். நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில்தான் பாதிக்கப்பட்ட மார்பகத்தை அகற்றவேண்டியிருக்கும். அதை நினைத்தும் வருந்த தேவையில்லை. ஏனெனில் தமிழகத்தில் மார்பக சீரமைப்பு, செயற்கை மார்பக உருவாக்கம் போன்ற சிகிச்சை முறைகள் அதிகரித்துவிட்டன.

* மார்பக அகற்றம் சிகிச்சைக்கு பிறகான வழிகாட்டுதல் எப்படி இருக்கும்?

மூன்று முறைகளில் செயற்கை மார்பகத்தை உருவாக்கலாம். ஒன்று உடலில் இருக்கும் தசைகளை கொண்டு உருவாக்குவது. மற்றொன்று, உடல் கொழுப்புகளை கொண்டு உருவாக்குவது. இறுதியாக வெளிநாடுகளில் பிரபலமான சிலிக்கான் பொருளை உட்செலுத்தியும் செயற்கை மார்பகத்தை உருவாக்கலாம்.

* பக்க விளைவுகளை உருவாக்குமா?

இல்லை. உலக அளவில் இது மிகவும் வெளிப்படையான சிகிச்சை. ஆனால் தமிழ்நாட்டில்தான் கூச்சப்படக்கூடிய, மூடிமறைக்கக்கூடிய சிகிச்சையாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இதுபோன்ற சிகிச்சைகள் சத்தமில்லாமல் அரங்கேறுகின்றன. பக்க விளைவும் மிகமிக குறைவு என்பதால், பல்வேறு காரணங்களால் மார்பகத்தை இழந்தவர்களும், மார்பகத்தை சீரமைக்க விரும்புபவர்களும் முயன்று பார்க்கலாம். செலவும் ரூ.1 லட்சம் முதல் ஒன்றரை லட்சத்திற்குள் அடங்கிவிடும்.

* மார்பக சீரமைப்பு சிகிச்சையில் உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?

டீன்-ஏஜ் பெண் ஒருவர் புற்றுநோயால் மார்பகத்தை இழந்துவிட்டார். உயிர் பிழைத்து வந்த மகிழ்ச்சியைவிட சமூகத்தை எப்படி எதிர்கொள்வது?, கல்லூரிக்குள் எப்படி நுழைவது?, குடும்ப வாழ்க்கை கேள்விக் குறியாகுமா? போன்ற பல கேள்விகள் அவளது மனதை ரணமாக்கிக் கொண்டிருந்தன. நான் அவளை சந்தித்து, திடப்படுத்தினேன். செயற்கை மார்பக உருவாக்கம் பற்றி விளக்கி, தைரியம் கொடுத்தேன். அதற்கு பிறகுதான், அவளுக்கு வாழ்க்கை இனிக்க தொடங்கியது. அவளது தன்னம்பிக்கையும் உயர்ந்தது. இவர் மட்டுமல்ல, குடும்ப பெண்கள், மாடல் அழகிகள், தொலைக்காட்சி பிரபலங்கள் போன்றோரும் தன்னம்பிக்கைக்காக மார்பக சீரமைப்பு, மார்பக குறைப்பு, உடல் கொழுப்பு அகற்றம் போன்ற சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

* மார்பக புற்றுநோய் சம்பந்தமாக நீங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு முயற்சிகளை பற்றி கூறுங்கள்?

சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். குறிப்பாக யூ-டியூப் சேனல் மூலமாக மார்பக புற்றுநோய் குறித்தும், விழிப்புணர்வு விஷயங் களையும், செயற்கை மார்பக சிகிச்சை குறித்தும் பகிர்ந்து வருகிறேன்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »