இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் படிப்பை முடித்ததும், நல்லவேலைக்கு சென்ற பிறகுதான் திருமணம் செய்து கொள்வதற்கு விரும்புகிறார்கள். 30 வயதை நெருங்கும்போதுதான் திருமணத்தை பற்றி யோசிப்பவர்களும் இருக்கிறார்கள். இளம் வயதில் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுபவர்களும் உண்டு. காலதாமதமாக திருமணம் செய்து கொள்வது, குழந்தை பேற்றை தள்ளிப்போடுவது போன்றவை சில சமயங்களில் தாய்மை அடைவதில் சிக்கல்களை உருவாக்கும். அப்படிப்பட்ட பெண்கள் கரு முட்டைகளை இளம் வயதிலேயே சேமித்துவைத்து அவர்கள் கருத்தரிக்க விரும்பும்போது உபயோகிக்கும் நடைமுறை இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
அப்படி தாய்மை அடைந்து குழந்தை பெற்றவர்களுள் ஒருவர், டாக்டர் ரூபினா கே.டி. சிங். கருத்தரிப்பு நிபுணரான இவர், 28 வயதில் தனது கரு முட்டைகளை சேமித்து வைத்திருக்கிறார். பின்னர் இவரது திருமணம் நடந்திருக் கிறது. கருமுட்டைகளை சேமித்து வைத்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் அதனை பயன்படுத்தி கண வரின் உயிரணு மூலம் நவீன மருத்துவ முறையில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியிருக்கிறார். காலதாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் கரு முட்டைகளை சேமித்து வைப்பதன் அவசியம் குறித்தும் விளக்குகிறார்.
“நான் மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்தேன். அப்போதே எனக்கு திருமண வயது கடந்துவிட்டது. படிப்பை முடித்துவிட்டு அப்போதுதான் வேலை பார்க்க தொடங்கி இருந்ததால் உடனே திருமணம் செய்து கொள்வதற்கு நான் விரும்பவில்லை. மருத்துவம் சார்ந்த படிப்பை தொடரவும் விரும்பினேன். கருத்தரிப்பு பற்றிய பெல்லோஷிப் திட்டம் என் கனவாக இருந்தது. அந்த வாய்ப்பும் கைகூடியது.
ஒரு மருத்துவராக மட்டுமின்றி குடும்ப பெண்மணியாக, காலம் தாழ்ந்து திருமணம் செய்யும்போது கருத்தரிப்பில் இருக்கும் சிக்கல்களை பற்றி சிந்திக்க தொடங்கினேன். பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது உடலில் உற்பத்தியாகும் கரு முட்டைகளின் தரம் குறைய தொடங்கும். அதனால் கருத்தரிப்பு சாத்தியம் இல்லாத சூழ்நிலை கூட உருவாகலாம் என்பதையும் அறிவேன். அப்போது எனக்கு 28 வயது கடந்திருந்தது. அதுதான் கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கான சரியான தருணம் என்று முடிவு செய்தேன். உடனே கரு முட்டைகளை சேகரித்து பதப்படுத்தி வைத்தேன்” என்கிறார்.
ரூபினா 2014-ம் ஆண்டு கரு முட்டையை சேமித்து வைத்திருக்கிறார். தான் விரும்பிய படிப்பை படித்து கருத்தரிப்பு நிபுணராகவும் ஆகிவிட்டார். அதன் பிறகு திருமணமும் செய்திருக்கிறார். அதேவேளையில் சேமித்துவைத்திருந்த கருமுட்டைகளை கொண்டு கருத்தரித்து 2018-ம் ஆண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார்.
“காலதாமதமாக திருமணம் செய்து கொள்ள நினைக்கும் பெண்கள் தங்கள் கருமுட்டைகளை எடுத்து அதற்குரிய நவீன முறையில் சேமித்து பாதுகாப்பது தவறில்லை. ஆனால் அப்படி செய்வது தவறானது என்ற எண்ணம் பெரும்பாலான குடும்பத்தினரிடம் இருக்கிறது. என் பெற்றோருக்கு கூட அச்சங்கள் இருந்தன. எனது உடல் இயல்பான முறையில் குழந்தையை பெற்றெடுக்கும் தன்மையுடன் இருக்கும்போது ‘இதை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று ஆதங்கப்பட்டார்கள். ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தினேன். பொதுவாகவே 25 முதல் 30 வயதுக்குள்தான் பெண்களின் கருமுட்டைகள் ஆரோக்கியமானதாகவும், தரமாகவும் இருக்கும். அத்தகைய கருமுட்டைகள்தான் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்தவை.
அந்த வயதுக்குள் கருமுட்டைகள் செழுமையாக இருப்பதால் பெண்கள் எளிதில் கர்ப்பம் அடைந்துவிடுவார்கள். திருமணத்தை தாமதப்படுத்தும்போது கரு முட்டைகளை வெளியே எடுத்து அதற்காக பிரத்யேகமாக உள்ள கருத்தரிப்பு மையங்களில் சேமித்து வைக்கமுடியும். சுமார் 10 ஆண்டுகள் வரை அந்த கருமுட்டைகளை பயன்படுத்தி கணவரின் உயிரணுவுடன் சேர்த்து கருவுறச் செய்யமுடியும். அதனை விரும்பாத பட்சத்தில் கருமுட்டைகளை தானமும் கொடுக் கலாம்” என்கிறார்.