Review-will-strengthen-you_விமர்சனங்கள் உங்களை வலிமையாக்கும்

விமர்சனங்கள் உங்களை வலிமையாக்கும்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உங்கள் பேச்சையோ, செயலையோ இன்னொருவர் விமர்சிக்கும்போது, உடனடியாக கோபம் வந்துவிடுகிறதா? கோபம் வந்தால், அது விவேகமல்ல! உங்களை நோக்கி வரும் விமர்சனம் என்பது வேகத்தடை போன்றது. அதில் சற்று நிதானித்து கடக்க வேண்டும். ஆனால் நின்று விடக்கூடாது.

உங்களை பற்றிய விமர்சனங்களுக்கு பயப்படவேண்டாம். ஏன்என்றால் விமர்சனங்கள் உங்களை வலிமையாக்கும். விவேகமாக்கும். உங்களை நோக்கி வரும் விமர்சனங்கள் உங்களை மன உளைச்சலுக்குள்ளாக்கினாலும் மற்றவர்கள் பார்வையில் நீங்கள் மிக முக்கியமான நபராக மாறிவிட்டீர்கள் என்று கருதவேண்டும்.

விமர்சனம் என்பது சில நேரங்களில் விமர்சிப்பவரின் இயலாமையை காட்டும். அவரால் முடியாததை நீங்கள் செய்து முடிக்கும்போது நீங்கள் அவரது விமர்சனத்துக்குள்ளாவீர்கள். மற்றவர்களை தொடர்ந்து விமர்சிப்பவர்கள் மனதளவில் பலவீனமாக இருப்பார்கள். உங்களை நோக்கி வரும் விமர்சனத்தை நீங்கள் எதிர்கொள்வதும், ஜீரணித்துக்கொள்வதும், பதிலளிப்பதும் ஒரு கலை.

விமர்சனங்கள் ஒருபோதும் உங்களை காயப்படுத்தி விடக்கூடாது. உங்களை சுற்றி பலர் இருக்கும்போது நீங்கள் விமர்சனங்களில் இருந்து விலகி இருக்க முடியாது. உங்களை பற்றி நான்கு பேர் விமர்சிக்கிறார்கள் என்றால், நாற்பது பேர் கண்களை உங்கள் செயல் உறுத்தியிருக்கிறது என்று அர்த்தம். உங்கள் மீதான எரிச்சலை அவர்கள் குறையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உங்களை விமர்சிப்பதன் மூலம் அவர்களுக்கு ஏதோ ஒருவித மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால் அவர்களது விமர்சனம் உங்களுக்கு விளம்பரத்தை தேடித்தருகிறது. உங்களை விமர்சித்து அவர்கள் உங்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

தமது விமர்சனம் யாரிடமும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விமர்சிப்பவர்களுக்கே தெரியும். ஆனாலும் தொடர்ந்து குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்களை நினைத்து நீங்கள் பரிதாபம்தான்கொள்ளவேண்டும். ஏன்என்றால் அவர்கள், தங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு உங்களை கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களது குழந்தைகளையும், மனைவியையும் கவனிக்காமல் உங்களை கவனிக்கிறார்கள். அதனால் அவர்களது குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும். அவர்கள் தினசரி வேலைகளை மறந்துவிட்டு உங்களை கண்காணிப்பதால் அந்த வேலையில் அவர்களது கவனம் இல்லாமல் போய்விடும். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது அவர்கள் முன்னேற்றத்துக்கு அவர்களே தடையாக இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை!

அதனால்தான் அடுத்தவர்களை விமர்சித்துக்கொண்டே இருப்பவர்கள் காலம் முழுக்க விமர்சிப்பவர்களாகவே இருக்கிறார்கள். விமர்சிக்கப்படும் நிலைக்கு அவர்களால் உயர முடியாது. குறை சொல்லியே வாழ்ந்து, குறை சொல்லியே மடிந்துபோவார்கள்.

நன்றாக பூத்து, காய்க்கும் செடிக்கு உரம் இடுவதைப் போன்றதுதான் விமர்சனமும்! அதை உரமாக எடுத்துக்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இருக்கவேண்டும். வென்னீராக எடுத்துக்கொள்ளும் மனநிலைக்கு சென்றுவிடக்கூடாது.

விமர்சனங்களை நீங்கள் ஒரு கலையாக கருதினால், அதை பற்றிய பயம் உங்களுக்கு போய்விடும். பயம் போய்விடும்போது, யார் விமர்சிக்கிறார்? என்பதை பார்க்காமல், விமர்சிக்கப்படும் கருத்து என்ன? என்பதில் கவனம் செலுத்த தொடங்கிவிடுவீர்கள். அப்போது உண்மையான அக்கறையோடு சொல்லப்படும் விமர்சனமா? அல்லது பொறாமையால் கிளப்பப்படும் குமுறலா? என்பது உங்களுக்கு தெரிந்துவிடும். உண்மையான அக்கறையுடன் சொல்லும் பயனுள்ள விமர்சனங்களை கேட்டு உங்களையே நீங்கள் திருத்திக்கொள்ளவேண்டும். தேவையற்ற விமர்சனங்கள் என்றால் அப்படியே அதை அலட்சியம் செய்திடவேண்டும்.

ஒருவர் உங்களை விமர்சிக்கிறார் என்றால், அவருக்கு எந்த தகுதியும் தேவையில்லை. ஆனால் விமர்சிக்கப்படும் நீங்கள் தகுதியானவராக இருப்பீர்கள். காய்த்த மரம்தான் கல்லடிபடும். அதனால் விமர்சனங்களை நினைத்து சோர்ந்து போகாமல் அதனை பக்குவமாக கையாளத் தெரிந்து கொள்ளுங்கள்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், சொந்த நாட்டிலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் காதுபடவே விமர்சித்தார்கள். எல்லாவற்றுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்தார். தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட எட்வர்ட் எம் ஸ்டைன் என்பவர் ஆப்ரகாம் லிங்கனை பார்த்து ‘மகா முட்டாள்’ என்று விமர்சித்தார்.

ஆப்ரகாம் லிங்கன் சிறிதும் பதற்றப்படவில்லை. ‘என்னை முட்டாள் என்று தெரிந்து வைத்திருக்கும் எட்வர்ட் அதி புத்திசாலி. ஆனால் ஒரு முட்டாள் வந்து தான் தங்களை வழிநடத்த வேண்டும் என்று அமெரிக்க மக்கள் தீர்மானித்து விட்டார்களே, நான் என்ன செய்வது’ என்று, அமெரிக்க மக்களை தன்னோடு இணைத்து பதிலடி கொடுத்தார்.

அதற்கு பதில்சொல்ல முடியாமல் எட்வர்ட் தலைகவிழ்ந்தார். பின்பு ஆப்ரகாம் லிங்கனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அப்போதும் லிங்கன் விடவில்லை. ‘ஒரு முட்டாளிடம் ஒரு புத்திசாலி மன்னிப்பு கேட்பது அமெரிக்காவில் மட்டும்தான் நடக்கும்’ என்று ஆத்திரப்படாமல் அமைதியாக குட்டுகொடுத்தார். இப்படித்தான் விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டும்.

Related Posts

Leave a Comment

Translate »