Can-honey-be-given-born-baby_பச்சிளம் குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா

பச்சிளம் குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பச்சிளம் குழந்தை சாப்பிட மறுத்தால் சிலர் நாக்கில் தேன் தடவி விடுவார்கள். அழுகையை நிறுத்துவதற்கும் சிலர் தேன் கொடுப்பது வழக்கம். குழந்தையும் தேனை விரும்பி ருசிக்கும். ஆனால் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதல்ல. தேனில் கிளோஸ்ட்ரிடியம் போட்லினம் எனும் ஒரு பாக்டீரியம் இருக்கிறது. இந்த வகை பாக்டீரியா குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மை கொண்டது.

பச்சிளம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஒரு வயதை கடந்த பிறகுதான் உருவாகும். அதுவரை குழந்தையின் உடலால், இந்தவகை பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட முடியாது. தேனில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் குழந்தையின் செரிமான அமைப்பையும் பாதிப்புக்குள்ளாக்கும். இதன் காரணமாக, குழந்தைக்கு ‘பொட்டூலிசம்’ எனும் நோய் ஏற்படக்கூடும். அதனால் குழந்தை சுவாசிப்பதில் சிக்கல் உருவாகும். அல்லது உடல் பலவீனமாகும். பொதுவாக இந்தவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மலச்சிக்கல்தான் முதல் அறிகுறியாக தென்படும். மேலும் சில அறிகுறிகளும் இருக்கின்றன.

* குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கும். எவ்வளவோ முயற்சி செய்தாலும் அதனை அமைதிப்படுத்த முடியாது.

* குழந்தையின் அடி வயிற்றில் வலி ஏற்படும். அந்த சமயத்தில் கையை வயிற்று பகுதியில் நகர்த்தி கொண்டே தொடர்ந்து அழுது கொண்டிருக்கும்.

* பசியாக இருந்தாலும் பால் குடிக்காது. அதனால் குழந்தையின் உடல் பலவீனமாகும். உடல் எடையும் குறைய தொடங்கும்.

* உடல்நிலை மோசமடையும் சூழலில் குழந்தைகள் இமைகளை இறுக்கமாக அழுத்தி கண்களை மூடத்தொடங்கும்.

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக ஒரு வருடமாகும் என்பதால் அதுவரை தாய்பால்தான் குழந்தையை பாதுகாக்கும். அதுதான் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ்கள், தொற்றுநோய் கிருமிகளிடம் இருந்து குழந்தையை பாதுகாக்கும். அதனால்தான் குறைந்தது 6 மாதங்களாவது தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுவரை வேறு உணவுகள் கொடுக்கக்கூடாது. ஒரு வயதுக்கு பிறகு தேன் கொடுக்கலாம். ஆனால் மூன்று வயதுவரை குறைந்த அளவே தேன் கொடுக்க வேண்டும்.

Related Posts

Leave a Comment

Translate »