குழந்தை குளித்த பிறகு, நகங்கள் சாஃப்டாக இருக்கும் என்பதால் அப்போது டிரிம்மரை வைத்து நகத்தைத் தேய்க்கலாம். குழந்தை தூங்கும்போது, நகம் வெட்டலாம் அல்லது ட்ரிமரால் தேய்க்கலாம். குழந்தை தூங்கவில்லை என்றால், குழந்தையின் கவனத்தை விளையாட்டு பொருளில் திருப்பிய பின்னர் நகத்தை வெட்டலாம்; சுத்தம் செய்யலாம்.
நகத்தை வெட்டுகிறேன் என்று குழந்தையின் சதைப் பகுதியை காயப்படுத்தி விடாதீர்கள். கொஞ்சம் இடைவெளி விட்டு நகத்தை வெட்டுவது சரி. நகம் வெட்டினால் அந்த இடம் கூர்மையாக இருக்கும். ஆடையின் நூலில் குழந்தையின் சின்ன சிறு விரல் நகம் சிக்கலாம். எனவே, நைல் ஃபைலரால் மென்மையாகத் தேய்த்துவிடுங்கள். சில குழந்தைகள் அதீத சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.
அவர்களுக்கு நகம் கட் செய்யும் போது, உதவிக்கு ஒரு நபரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் குழந்தையின் கவனத்தைத் திருப்ப, இன்னொருவர் குழந்தையின் நகங்களை சுத்தம் செய்யலாம். நகம் கட் செய்யும்போது, தவறுதலாக, தெரியாமல் குழந்தையின் சருமத்தில் ஏதேனும் கீறலோ ரத்தமோ வந்தால் உடனடியாக பஞ்சை வைத்து அதை அப்படியே அழுத்திப் பிடியுங்கள். மிதமாக அழுத்திப் பிடிக்கவும்.
சில அம்மாக்கள் குழந்தையின் நகங்களை தன் வாயால் கட் செய்வார்கள். இது தவறு. அப்படி செய்ய கூடாது. இதனால் உங்களுக்கும் குழந்தைக்கும் கிருமி பாதிப்புகள் வரும்.