வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் இந்து உப்பைவிட சற்று அடர் நிறத்துடன் காணப்படும் கருப்பு உப்பையும் அழகு சாதன மூலப்பொருளாக உபயோகிக்கலாம். இது சருமத்திற்கு பளபளப்பு தன்மையை உண்டாக்குவதோடு இளமையான தோற்றப்பொலிவையும் தக்கவைக்கும். இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். இளமையான சரும ரகசியத்திற்கு கருப்பு உப்பை பயன்படுத்தும் விதம் குறித்து பார்ப்போம்.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு ஈரப்பதத்தைதக்கவைக்க, கருப்பு உப்புடன் தேனை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு அந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் பாதாம் எண்ணெய்யுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம். பாதாம் எண்ணெய்க்கு ஈரப்பதமூட்டும் தன்மை இருப்பதால் வறண்ட சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி தரும். மூன்று டீஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். பாதாம் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யும் பயன்படுத்தலாம்.
எண்ணெய் பசை தன்மை கொண்ட சருமம் கொண்டவர்கள் ஓட்ஸுடன் கருப்பு உப்பை உபயோகிக்கலாம். அது சருமத்தில் எண்ணெய் சுரப்பை சமன் செய்ய உதவும். ஓட்ஸ் மற்றும் கருப்பு உப்பை சிறிதளவு கலந்து அதனுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்பு கைகளால் மென்மையாக துடைத்து மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றம் தென்படும். சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால் முகத்தை கழுவிய பிறகு ரோஸ் வாட்டரை தடவலாம்.
முகத்தில் கரும்புள்ளி, வெண் புள்ளி, முகப்பரு போன்ற பிரச்சினைகள் இருந்தால் எலுமிச்சை பழத்துடன் கருப்பு உப்பை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு டீஸ்பூன் கருப்பு உப்பை கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு நீரில் கழுவி விடலாம்.