kids-Stutter_குழந்தைகளின் திக்குவாய்க்கும் தீர்வு காணலாம்...

குழந்தைகளின் திக்குவாய்க்கும் தீர்வு காணலாம்…

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஒருவருக்கு சரளமாக பேச முடியாமல் விட்டு விட்டு பேசும் நிலை இருந்தால் அவருக்கு திக்குவாய் குறை இருக்கிறது எனலாம். அவர்கள் பெரும்பாலும் சில சொற்களை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேசும் போது தங்கள் உடல் அசைவுகளால் தங்கள் குறையை ஈடு கட்ட முயலுவார்கள். பொது மக்கள் இந்த குறைபாட்டின் தன்மையை அறிந்து கொள்ளும் பொருட்டும் திக்குவாய் பாதிக்கப் பட்டவர்களிடம் அன்பாக நடந்து கொள்வதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 22-ம் தேதி திக்குவாய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

திக்குவாய் குறைபாட்டுக்கு பின்வரும் பல காரணங்கள் காரணிகளாய் அமைகின்றன. அவையாவன: மரபியல் ரீதியாக குடும்ப பரம்பரை, நரம்பு சம்பந்தமான பிரச்சினை, மனதை பாதிக்கும் சில பிரச்சினை, அதிக மனஉளைச்சல்கள் காரணமாகவும் இந்த பிரச்சினை ஏற்படும். திக்குவாய் உள்ள நண்பர்களை போல் பாவனை செய்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அந்தக் குறை ஏற்பட வாய்ப்புண்டு. உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் இந்த குறையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மட்டும் ஒரு கோடிக்கு மேல் இந்த குறை உள்ளவர்கள் இருக்கின்றனர். பெண்களை விட ஆண்களே இந்த குறையால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். திக்குவாய் குறைபாட்டை குணப்படுத்த மருந்துகள் எதுவும் இல்லை. இதன் அடிப்படை காரணத்தைத் தெரிந்துக்கொண்டு அதற்கு உண்டான பேச்சுப் பயிற்சி கொடுத்து தன்னம்பிக்கை ஊட்டுவதன் மூலமே இந்த குறையை குணப்படுத்த முடியும். இந்தப் பயிற்சி அளிப்பதற்கு குறிப்பிட்ட கால அளவை அறுதியிட்டு கூறமுடியாது. இந்த குறைபாட்டின் தீவிரத்தன்மையைப் பொறுத்தே இதனுடைய பயிற்சிக் காலம் தீர்மானிக்கப்படும்.

இந்த குறை உள்ளவர்கள் தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சூழல்களை எதிர்கொள்ள அச்சப்படுவார்கள். மற்றவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பார்கள். சில சமயங்களில் பெற்றோரிடமும், நெருக்கமான நண்பர்களுடனும் பேசும்போது இவர்கள் திக்காமல் சரளமாகப் பேசுவார்கள். பாட்டுப் பாடும்போது இவர்களால் திக்காமல் பாடமுடியும். இவர்கள் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் பேசும்போதும், மிகவும் புதியவர்களிடம் பேசும்போதும், தன் மேல் அதிகாரிகளிடத்தில் பேசும்போதும், தொலை பேசியில் பேசும் போதும், மற்ற பாலினத்தவர்களுடன் பேசும் போதும், அந்நிய மொழியில் பேசும்போதும் அதிகமாக திக்குவார்கள்.

சிலர் தான் பேச நினைப்பதை வேகமாக பேசி முடிக்க முயல் வார்கள். இத்தகையவர்களுக்கு பேச்சுப் பயிற்சியாளர்கள் இவர்களின் எதிர் மறை எண்ணங்களை மாற்றி அவர்களுக்கு நல்ல தன்னம்பிக்கையை ஊட்டி அவர்களை ஊக்குவிப்பார்கள். ஒரு குழந்தையின் பேச்சு குறைபாட்டை அதன் பேச்சு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதற்குரியப் பேச்சுப் பயிற்சி அளிப்பதன் மூலம் குறைந்த கால அளவிலேயே அதை குணப்படுத்த முடியும்.

பெற்றோர்கள் பேச்சுப்பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யுமாறு நடந்துக் கொள்ளவேண்டும். அவர்களின் மனதை பாதிக்கும் விதமாக எதையும் எப்போதும் செய்யக்கூடாது. மற்ற குழந்தைகளுடன் எப்போதும் ஒப்பிடக்கூடாது. குறை கூறக்கூடாது. அவர்கள் பேசும் போது பொறுமையுடன் கூர்ந்து கவனிப்பதுவும், உற்சாகப் படுத்துவதும், அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுவதும், அவர்களுக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்வதும் அவசியம் நல்ல பலனைத்தரும்.

சிலர் பழைய மூட நம்பிக்கையின் படி திக்குவாய் உள்ள குழந்தையின் வாயில் கூழாங்கற்களைப் போட்டு குழந்தையை சத்தமாகப் பேசச் சொல்வார்கள். இது குழந்தைக்கு சரியான சிகிச்சை கிடையாது. மேலும் குழந்தை தவறுதலாக அதை விழுங்க நேரிட்டு தொண்டையில் அடைத்துக் கொள்ளும் ஆபத்தும் விளைய வாய்ப்புண்டு. பேச்சுப் பயிற்சியாளர்கள் திக்குவாய் உள்ள குழந்தைகளுக்கு மூச்சுப் பயிற்சி அளித்து நிதானமாகப் பேச வைப்பார்கள். அவர்களை முதலில் தனித்தனியாக பேசப் பயிற்சியளிப்பார்கள்.

ஒவ்வொரு சொல்லாக பேசப்பயிற்சி அளித்துப் பின்னர் வாக்கியமாக பேச வைப்பார்கள். குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு பேராக குழுக்களாகப் பிரித்து அவர்களுக்குள் உரையாட வைப்பார்கள். அவர்களுக்கு துணிவை ஏற்படுத்தி அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசவைத்து பயிற்சி அளிப்பார்கள். இதே போல் கையின் கட்டை விரலை நாக்காகவும், மற்ற விரல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சொல்லாகவும் நினைக்க வைத்து எந்த விரல் கட்டை விரலைத் தொட வைக்கிறோமோ அதற்கு ஒதுக்கப் பட்ட சொல்லை சொல்லிப் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி கொடுக்கப்படுவதில்லை. வயதுக்கு ஏற்றாற் போலும், சூழலுக்கு ஏற்றவாறும் மற்றும் திக்குவாய் குறையின் அளவிற்கு ஏற்றவாறும் பயிற்சிகள் மாறுபடும்.

Related Posts

Leave a Comment

Translate »