கடைக்கு சென்று துணிகளை வாங்கும்போது எம்ப்ராய்டரி செய்யப்பட்ட துணிகளை வாங்குவதற்கு முக்கியத்துவம் தருகிறோம். ஆனால், அவை கைகளினால் செய்யப்படும் எம்ப்ராய்டரியா அல்லது மெஷின் எம்ப்ராய்டரியா என்பது பலருக்கும் தெரிவதில்லை.
அதேபோல் எம்ப்ராய்டரி வகைகளில் எந்த வகை என்பதும் தெரிவதில்லை. எம்ப்ராய்டரி குறித்த சுவையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கை எம்ப்ராய்டரி:-
புல்கரி, மிரர்/சீஷா வேலைப்பாடு, சிக்கன் கரி, கட்ச் எம்ப்ராய்டரி, காந்தத்தா வொர்க், ஜர்தோஷி எம்ப்ராய்டரி மற்றும் கஷிடா எம்ப்ராய்டரி போன்றவை மிகவும் பிரபலமான கை எம்ப்ராய்டரி வகைகள் ஆகும்.
புல்கரி எம்ப்ராய்டரி:-
பஞ்சாப் மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டது இந்த வகை எம்ப்ராய்டரி ஆகும். பலவிதமான மலர்களின் வடிவங்களை மிகவும் கண்கவர் வண்ணங்களில் குறிப்பாக டார்னிங் ஸ்டிட்ச் மூலம் எம்ப்ராய்டரியாக போடுவது புல்கரி வேலைப்பாடு ஆகும். இப்பொழுது பெரும்பாலும் ஜியாமெட்ரிகல் வடிவங்களிலேயே இந்த வகை எம்ப்ராய்டரி டிசைன்கள் ஆடைகளில் இடம்பெறுகின்றன.
மிரர் / சீஷா வேலைப்பாடு:-
பல வடிவமான கண்ணாடி துண்டுகளை வைத்து அவற்றை சுற்றி எம்ப்ராய்டரி செய்யப்படும் துணிகள் பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றத்தை தருவதுடன் மிகவும் டேஸ்லிங்காகவும் இருக்கும்.
சிக்கன்கரி:-
கிழக்கு வங்கத்தை பிறப்பிடமாக கொண்ட இந்த வகை எம்ப்ராய்டரி பெரும்பாலும் வெள்ளை நிறத் துணிகளில் காட்டன் நூல்களை கொண்டு செய்யப்பட்டு வந்தது. இப்பொழுது காட்டன், லினென், ஜியார்ஜெட் போன்ற லேசான எடையுள்ள துணிகளிலும் ஸேடின் ஸ்டிச், ஸ்டேம் ஸ்டிச், பேக் ஸ்டிச், பட்டன் ஹோல் மற்றும் ஜால் ஸ்டிச் இவற்றை கொண்டு மிகவும் அழகான எம்ப்ராய்டரி டிசைன்கள் வடிவமைக்கப்படுகின்றன.
கட்ச் எம்ப்ராய்டரி:-
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் நகரம் இவ்வகை எம்ப்ராய்டரிக்கு பிரபலமாகும். கட்ச் எம்ப்ராய்டரியானது முக்கியமாக ஹெர்ரிங்கோன் தையல்களால் செய்யப்படுகிறது. இவற்றை சிந்தி எம்ப்ராய்டரி என்றும் அழைக்கிறார்கள்.
சிறிய சதுரங்கள் கட்ச் எம்ப்ராய்டரியின் அடிப்படையாக அமைகின்றன.
காந்த்தா எம்ப்ராய்டரி:-
மிகவும் அழகான மற்றும் தனித்துவமான எம்ப்ராய்டரி பாணியை கொண்ட காந்த்தா வேலைப்பாடு மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்ததாகும்.
இந்த எம்ப்ராய்டரி முழுவதும் எளிய தையல்களே பயன்படுத்தப்படுகின்றன. ராமாயணம், மகாபாரதம், புராண கதைகளின் காட்சிகள் மற்றும் இயற்கை காட்சிகள் இந்த வகை எம்ப்ராய்டரி மூலம் மிகவும் சிறப்பாக ஆடைகளை அலங்கரிக்கப்பதோடு பெண்கள் மனதிலும் இடம் பிடிக்கின்றன.
ஜர்தோஷி எம்ப்ராய்டரி:-
தங்க நிற மற்றும் வெள்ளி நிற நூல்களை கொண்டு செய்யப்படும் ஜர்தோஷி எம்ப்ராய்டரி வேலைப்பாடானது பெரும்பாலான மணப்பெண்களின் ஆடைகளில் இடம் பெற்றிருக்கும்.
மிகவும் சிக்கலான மற்றும் அழகான வடிவங்களை கவுச்சிங் ஸ்டெம் ஸ்டிச், ரன்னிங் ஸ்டிச் மற்றும் ஸேடின் ஸ்டிச்களின் மூலம் ஜர்தோஷி எம்ப்ராய்டரியாக உருவாக்குகிறார்கள்.
கஷிடா எம்ப்ராய்டரி:-
காஷ்மீர் சால்வை மற்றும் கஃப்தான்கள் உலக அளவில் பிரபலமடைந்ததற்கு காரணம் கஷிடா எம்ப்ராய்டரி வேலைப்பாடு என்று உறுதியாக சொல்லலாம். கஷிடா எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்ட துணியின் இரு புறமும் ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கும்.
கிளிகள், மயில்கள், மரங்கொத்தி, இலைகள், ஆப்பிள்கள், பிளம்ஸ், செர்ரிஸ், திராட்சை கொத்து மற்றும் பலவிதமான மலர்களையும் இந்த வகை எம்ப்ராய்டரியில் மிகவும் தத்ரூபமாகவும், அழகாகவும் கொண்டுவர முடியும்.
மிகவும் பிரபலமான பஷ்மினா சால்வைகள், புடவைகள் மற்றும் படுக்கை விரிப்புகளில் இடம் பெற்றிருப்பவை இவ்வகை காஷ்மீரி எம்ப்ராய்டரி வேலைப்பாடு ஆகும்.