summer-vacation-effectively-with-the-kids_குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

1.படம் வரைதல் (Drawing)

உங்கள் குழந்தைக்குப் படம் வரைவதில் ஆர்வம் இருக்கும். அவனுடன் அமர்ந்து நீங்களும் அவனுக்குச் சின்ன சின்னப் படங்களை வரையக் கற்றுக் கொடுக்கலாம். அப்படிச் செய்யும் போது மேலும் அவன் முறையாக கற்றுக் கொள்ளத் தொடங்குவான். இதனால் அவனது கற்பனைத் திறனும் அதிகரிக்கும்.

2.சிறு வீட்டுத் தோட்டம் அமைத்தல் (Gardening)

இன்று பெரும்பாலோனோர் அடுக்கு மாடிக் குடி இருப்பில் வசிக்கின்றனர். இதனால் தோட்டம் அமைக்கவோ, விளையாடவோ குழந்தைகளுக்குப் போதிய அளவு இடம் கிடைப்பதில்லை. இருந்தாலும், உங்கள் குழந்தைக்குச் செடி வளர்ப்பதில் ஆர்வத்தைத் தூண்ட உங்கள் வீட்டு மேல்மாடம் மற்றும் சமையல் அறையில் சிறு தொட்டிகளை வைத்து, செடிகளை வளர்க்க ஊக்குவியுங்கள். வெங்காயம், தக்காளி, வெந்தயம்,சில காய்கள்,பூச்செடிகள் ஆகியவற்றின் விதைகளை மண்ணில் விதைத்து அது எப்படி முளைத்து வளர்கின்றது என்று காட்டுங்கள். மேலும் அதற்கு அவனைத் தினமும் தண்ணீர் விடச் சொல்லி,இயற்கை மற்றும் விவசாயத்தின் அருமை பெருமைகளைப் பற்றிக் கூறிப் புரிய வையுங்கள். இதனால் அவன் இயற்கை மீது பற்று கொண்டவனாகவும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவனாகவும் பின்னாளில் விளங்குவான்.

3.பறவைகளுக்கு உணவு தருதல் (Feed birds)

இந்த விடுமுறையில் வீட்டு மொட்டை மாடியில் பறவைகளுக்கென்று ஒரு தட்டில் உணவு மற்றும் தண்ணீர் வைப்பதை உங்கள் குழந்தையின் வாடிக்கையான பழக்கமாக மாற்றுங்கள். குறிப்பாக காகம், மைனா, புறா, சிட்டுக் குருவி போன்ற பல பறவைகள் சரியான உணவு கிடைக்காமல் பறந்து திரிந்து அலைகின்றன. ஆக ஓரிடத்திலேயே உணவு தினமும் கிடைக்கும் என்ற சூழலில்,அங்கு பறவைகள் வாடிக்கையாகத் தினமும் வரத் தொடங்கும். இதை உங்கள் குழந்தைக்குக் காட்டி உற்சாகப் படுத்துங்கள். பிற உயிர்களிடம் அவனுக்கு அன்பும், உதவும் நற்குணமும் இதனால் வளரும். மேலும் இது அனைவரது மனதிற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

4.கைவினைப் பொருட்கள் செய்தல் (Do craftworks)

உங்கள் குழந்தைக்குச் சிறு கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக் கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய பொருட்களை வைத்து, குறிப்பாக அட்டைப் பெட்டி, பழைய டப்பாக்கள் என்பனவற்றை எப்படி உபயோகமான பொருட்களாக மாற்றுவது என்று கற்றுக் கொடுங்கள். இது அவனுக்குச் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, சற்று சுவாரசியமான வேலையாகவும் அமையும்.

5.சமையலில் ஆர்வம் ஏற்படுத்துதல் (Cooking)

குழந்தைகள் விளையாடச் சிறு சொப்பு சாமான்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவை மரம், கல், நிலை வெள்ளி,நெகிழி முதலிய பல்வேறு பொருட்களில் செய்யப் பட்டு சந்தையில் கிடைக்கின்றன. எனினும் நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப, கற்கள் அல்லது மரத்தால் செய்த சொப்பு சாமான்கள் வைத்து உங்கள் குழந்தைக்குச் சமையல் செய்யும் விளையாட்டை கற்றுக் கொடுக்கலாம். உங்கள் குழந்தையை மேலும் ஊக்கப் படுத்த, சில காய், மற்றும் பழங்களைக் கொடுத்தோ அல்லது நீங்கள் சமைத்த உணவில் சிறிது கொடுத்தோ விளையாட ஊக்குவிக்கலாம். இதனால் உங்கள் குழந்தைக்குச் சிறு வயதிலேயே சமையற்கலையில் ஆர்வம் ஏற்படக்கூடும்.

6.பேச்சுத் திறனை ஊக்கப்படுத்துதல் (Improve speaking skill)

உங்கள் குழந்தை ஒரு நல்ல பேச்சாளனாக ஆகும் திறன் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், அவனுக்கு ஒரு சிறிய தலைப்பு கொடுத்து அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் பற்றிப் பேசச் சொல்லுங்கள். மேலும் அவனை ஊக்கவிக்கும் வகையில் அவனுக்கு நீங்கள் சில பொது அறிவு தகவல்களையும் சொல்லிக் கொடுங்கள்.

7.மூளைத் திறனை அதிகப்படுத்தும் வகையிலான கணக்குகள் (Doing sums)

இன்று குழந்தைகளின் மூளைத் திறன் அதிகப்படும் வகையில் சிறு சிறு உபயோகமான கணக்குப் பாடங்கள் அல்லது நுணுக்கமான வகையில் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் பல செயல் திறன் பாடங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சுவாரசியம் குறையாமல் கற்றுக் கொடுக்கலாம்.

8.நீச்சல் (Swimming)

இது ஒரு அற்புதமான தற்காப்புக் கலையாகும்.உங்கள் வீட்டில் தொட்டி அமைத்தோ அல்லது அருகில் உள்ள பாதுகாப்பான நீர்நிலைகளுக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுக்கலாம்.வெயில் காலத்தில் தண்ணீரில் விளையாடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.நீச்சல் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இவை மட்டும் இல்லாமல், மேலும் பல கோடை விடுமுறைக்கால செயல் திறன்கள் உங்கள் குழந்தைக்காக உள்ளன. எனினும், அவனுக்கு நீங்கள் அதனைக் கற்றுக் கொடுக்கும் முன் அதைப் பற்றிய பல விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். உங்கள் குழந்தையை உறவினர்கள் வீடு, பூங்கா, கண்காட்சி, அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். இது மேலும் அவனது நேரத்தை உபயோகமான வழியில் செலவு செய்வதோடு, பல விசயங்களைக் கற்றுக் கொள்ள நல்ல சூழலையும் உருவாக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »