ஒவ்வொருவருக்கும் முதுகு வலி, இடுப்பு வலி, முட்டிவலி என வெவ்வேறுவிதமான பிரச்னைகள் இருக்கும். மேலும், ஒவ்வொருவரின் வேலை, வாழ்வியல் நடவடிக்கைகள் மாறுபடும் என்பதால், மற்றவர்களோடு ஒப்பிட்டு, அதிகப்படியான எண்ணிக்கைகளில் பயிற்சிகள் செய்வதை தவிர்ப்பதற்காக முதலில் வாடிக்கையாளர்களிடம் பேசி புரிய வைப்பது பயிற்சியாளர்களின் கடமை.
இதனால் அவர்கள் அதிகப்படியான ஆர்வத்தில் பயிற்சிகளைச் செய்து தசைகளிலும், எலும்புகளிலும் கடுமையான காயங்கள் மற்றும் உடல்வலிகள் வரவழைத்துக் கொள்வதை தவிர்க்கலாம். ஆரம்பத்தில் மிதமான பயிற்சிகளை குறைவான எண்ணிக்கையில் செய்யத் துவங்கி, போகப்போக கடினமான பயிற்சிகளை, எண்ணிக்கை அதிகரித்து செய்வதன் மூலம் ஒருவர் அடைய நினைத்த இலக்கை அடையலாம்.
எடுத்தவுடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கக்கூடாது. உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், ‘வார்ம் அப்’ பயிற்சிகள் செய்வது அவசியம். அப்போதுதான் பயிற்சிகளுக்குப்பின் தசைகளில் ஏற்படும் வலியின் தீவிரத்தைக் குறைக்க முடியும். வார்ம் அப் செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தசைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் கிடைக்கும்.
ஒரு குறிக்கோளோடு ஜிம்மில் சேருங்கள். இதற்கான SMART ஃபார்முலா ஒன்று இருக்கிறது. S – Specific எத்தனை கலோரி எரிக்க வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ப பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கலாம். M – Measurable நீங்கள் எரிக்கும் கலோரிகளை உங்கள் கருவிகள் கண்காணிக்கும், எனவே நீங்கள் அடைய வேண்டிய இலக்கை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
Attainable ஒரு வாரப் பயிற்சிக்குப்பின் 1000 கலோரிகள் எரித்திருப்பீர்களேயானால், அதிலிருந்து சிறிதளவே அதிகரித்து, அடுத்த வாரம் 1250 கலோரிகள் என எளிதில் அடையக்கூடிய இலக்காக நிர்ணயிக்க வேண்டும். இதற்கு ஏதாவது ஒரு பயிற்சியை அதிகரித்தாலே அது சாத்தியமாகிவிடும். Relevant – உடற்பயிற்சி முற்றிலும் எடை இழப்போடு தொடர்புடையது என்பதால் எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்கிறீர்களோ அந்த அளவிற்கு உடல் எடையை குறைக்க முடியும்.
Time -Bound குறிப்பிட்ட நேர அளவை வகுத்துக் கொள்ள வேண்டும். இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக ஒரு நாள் அதிக நேரம் செய்துவிட்டு, அடுத்த நாள் செய்யாமலே இருப்பது என்பது தவறு. சீரான நேரத்தில் செய்வதால், இந்த வாரம் உங்கள் இலக்கை அடைய முடியாவிட்டாலும், அடுத்த வாரம் முடித்து விடலாம். அல்லது இலக்கை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
அளவுக்கதிகமான எடைதூக்கி பயிற்சி செய்வதும் தவறு. பயிற்சியாளரின் அறிவுரையின்றி தாங்களாகவே கண்ணில் தெரியும் உபகரணங்களை தூக்கி பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதனால் திசுக்கள் சேதமடைந்து விரைவில் உடற்பயிற்சி செய்வதையே இடையில் நிறுத்தி விடுவார்கள். பளு தூக்கி செய்யும் போது மூச்சு நுட்பங்களை பயிற்சியாளர் சொல்லித் தருவார். இல்லையென்றால், ஹெர்னியா என்கிற ஆண்களுக்கு குடல் இறங்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை இறங்குவது போன்று உள்ளுறுப்புகள் சேதமடைய வாய்ப்புண்டு. பளு தூக்குவதைப் பொருத்தமட்டில் ஒருவருக்கு, இவ்வளவு எடை, இத்தனை முறை செய்யலாம் என குறிப்பிட்ட விதிகள் இருக்கிறது. அவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.