Classrooms-for-childrens-life-training-field_பிள்ளைகளின் வாழ்க்கை பயிற்சி களமான வகுப்பறைகள்

பிள்ளைகளின் வாழ்க்கை பயிற்சி களமான வகுப்பறைகள்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நான்கு சுவர்களுக்கு நடுவில் கிடக்கும் வெற்றிடமென்று பார்க்கத் தெரிந்தாலும், வகுப்பறை என்பது நான்கு திசைகளையும் அளக்கத்துணிந்த இளந்தலைமுறையினரின் பயிற்சிக்கூடம்.

எத்தனைதான் பயின்றாலும் பயிற்றினாலும், நாளும் பொழுதும் கற்போரும் கற்பிப்போரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தான் வாழ்க்கை. அதற்கான பயிற்சிக்கூடம் தான் வகுப்பறை. கரும்பலகையில் எண்ணையும், எழுத்தையும் இன்ன பிறகோடுகளையும், வளைவுகளையும், புள்ளிகளையும் தீட்டிக்காட்டி புரிய வைக்கும் சாமர்த்தியம் கைவரப்பெற்றவர்களால், வகுப்பறை ஒரு பல்கலைக்கூடமாக திகழ்கிறது. பயம் களையப்படுகிற இடத்தில் தான் நல்ல பாடம் கிடைக்கும். அச்சுறுத்தி அடிமைத்தனத்தை வளர்க்கலாமே ஒழிய, அறிவை வளர்க்க இயலாது.

எந்தக் குழந்தையும் அறியாமையின் சொரூபம் அன்று. அதன் செவியிலும், சிந்தையிலும் வரையறுக்கப்பட்ட கருத்தை அல்லது பாடத்தை திணித்தால் அது திமிறும். மறுதலிக்கும். எதிர்ப்புணர்ச்சிக்கும் வெறுப்புணர்ச்சிக்கும் அதுவே வழிவகுக்கும். அண்டா நிறைய இருக்கிற நீரை, குறுகிய வாயினை உடைய ஒரு குடுவைக்குள் கொள்ளும் அளவிற்கு ஊற்றுகிற நேர்த்தி தெரிந்தவர்கள் ஆசிரியர்கள்.

அதற்கு பாடப்புத்தகம் என்பது ஒரு கையேடு. எந்த பாடமாயினும் அதனோடு தொடர்புடைய கவிதை, கதை, வரலாறு, உள்ளூர் நிலவியல் மற்றும் சூழலியல் தன்மைகளை இணைத்து சொல்லி, அப்பாடம் குறித்த சித்திரத்தை கற்போர் மனங்களில் நிலைப்படுத்தி விடுகிற ஆசிரியர்கள் பயில்வோருக்கு மிகச்சிறந்த முன்னோடிகள். உலகின் எந்த உண்மையும் தனது ஆசிரியருக்கு தெரியாமல் இருக்காது என்ற நம்பிக்கையை குழந்தைகள் பெறுவது இந்த கணத்தில் தான்.

வறுமை சூழ்ந்த கிராமத்து பழைய பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள் இன்னும் மனச்சித்திரங்களாக பலரின் சிந்தைகளை நிறைத்திருப்பதற்கும் இதுதான் காரணம். கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று. அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும். அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இடம் வகுப்பறை.

வாழ்வியல் விஷயங்களை உள்ளடக்கிய கல்விமுறை வழங்கும் கலைக்கூடங்களாக என்று பள்ளிகள் உயர்கின்றனவோ, அன்று தான் வளரும் தலைமுறையினர் தகுந்த குடிமகன்களாக உருவாவார்கள் என்பது உறுதி. தனித்தன்மை சிதையாமல், பொதுத்தன்மை குலையாமல் மனிதத்துவத்தோடு குழந்தைகள் வளர துணை புரியும் வகுப்பறை என்பது சிறைச்சாலையன்று. கனவுகளின் தொழிற்சாலை கூட இல்லை. பாடங்களின் கருத்தை எளிதாக கற்றுக்கொடுக்கும் தவச்சாலை.

Related Posts

Leave a Comment

Translate »