பெண்கள் சருமத்தை அழகு படுத்துவதில் செய்யும் தவறுகள்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சரும அழகை மேம்படுத்த மேக்கப் செய்கிறவர்கள், பொதுவான சில தவறுகளை தொடர்ந்து செய்கிறார்கள். அது காலப்போக்கில் அவர்களது சருமத்தை பாதித்து, முதிய தோற்றத்தை உருவாக்கிவிடும். அத்தகைய தவறுகள் என்னென்ன தெரியுமா?

சருமத்தின் மேல் அடுக்கில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் இயற்கையாகவே உதிர்ந்துவிடும். குறிப்பிட்ட நாட்களுக்குள் இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உற்பத்தியாகிவிடும். ஆனால் சில சமயங்களில் இறந்த செல்கள் முழுமையாக உதிர்வதில்லை.

வயதாகும்போதுதான் இந்த பிரச்சினை அதிகரிக்கும். சிலர் இறந்த செல்களை நீக்குவதற்கான ‘எக்ஸோலியேட்டர்’ எனும் பிரத்யேக பொருளை கொண்டு சருமத்தை புதுப்பிப்பார்கள். ஆனால் இந்த நடைமுறையை அடிக்கடி பின்பற்றும்போது சருமத்தில் இயற்கையாகவே உருவாகும் எண்ணெய்த்தன்மை குறைந்து, வெளிப்புற செல் அடுக்குகளும் சேதமடையும். வறண்ட சருமம் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி ‘எக்ஸோலியேட்டர்’ செய்யக்கூடாது.

முகம் கழுவுதல்

இரவில் தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவவேண்டும். குறிப்பாக மேக்கப் போட்டிருந்தால் முகம் கழுவுவது அவசியமானது. இல்லாவிட்டால் சரும துளைகள், எண்ணெய் சுரப்பிகள் அடைபட்டு தோல் பிரச்சினைகள் உண்டாகும். இரவில் முகம் கழுவுவதால் இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சி பெறும்.

சன்ஸ்கிரீன்:

பெரும்பாலானோர் செய்யும் மற்றொரு முக்கியமான தவறு சன்ஸ்கிரீன் பயன்படுத்தாததுதான். முதுமையின் அறிகுறிகளை குறைப்பதற்கும், புற ஊதாக்கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கும் சன்ஸ்கிரீன் அவசியமானது. இது சருமத்திற்கு பாதுகாப்பு அடுக்காக செயல்படக்கூடியது. முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கக்கூடியது. சரும புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கக்கூடியது. வெளியே செல்லும்போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் சிறிதளவு சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

ஒப்பனை பிரஷ்கள்:

ஒப்பனைக்கு பயன்படுத்தும் பிரஷ்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதில் காண்பிக்கும் ஆர்வத்தை, அதற்காக பயன்படுத்தும் பிரஷ்கள் மீதும் காட்டவேண்டும். அழுக்கடைந்த, சுத்தம் செய்யப்படாத பிரஷ்களை பயன்படுத்துவது சரும அடுக்கை சேதப்படுத்தி விடும். முகப்பருக்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். சருமத்தில் அழுக்கு, இறந்த செல்கள் படிவதற்கும் காரணமாகிவிடும்.

பருக்கள்:

முகத்தில் பருக்கள் தோன்றினால் அதனை நகத்தை கொண்டு கிள்ளக்கூடாது. அது சரும துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி மேலும் பருக்கள் தோன்ற வழிவகுத்துவிடும். முகப்பருக்கள் தோன் றினால் விரைவாக முகப்பருக்களை குணமாக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை சரியாகும் வரை பொறுமைகாக்கவும் வேண்டும்.

அதிக பயன்பாடு:

சருமத்திற்கான அழகு சாதன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவது தவறானது. சருமத்தின் தன்மையை பொறுத்து பயன்படுத்தும் அளவை தீர்மானிக்க வேண்டும். சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தால் சரும தயாரிப்பு பொருட்களை கவனமாக கையாள வேண்டும். சரும மருத்துவ நிபுணரை கலந்தாலோசித்து சரும பொருட்களை தேர்வு செய்வது நல்லது.

வெந்நீர் குளியல்:

வெந்நீரில் குளிப்பதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சருமத்தில் படர்ந்திருக்கும் ஈரப்பதத்தையும், இயற்கை எண்ணெய் சுரப்பிகளையும் சேதப்படுத்திவிடும். சுடுநீரை விட தண்ணீர்தான் குளியலுக்கு உகந்தது.

கிரீம்கள்:

இரவில் தூங்கும்போது, இரவு நேர கிரீம்களை உபயோகிப்பது முகத்தை புத்துணர்ச்சியாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க உதவும். ‘நைட் கிரீம்கள்’ சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். கண்களின் அடிப்பகுதியிலும் கிரீம் தடவிவிட்டு தூங்க செல்லலாம். அவை கண்களை சுற்றியுள்ள மென்மையான சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவி முதுமைக்கான அறிகுறிகளை குறைக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »