தற்போது நிறைய பேருக்கு எந்த பிரச்சனைக்காக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்தாலும் கல்லீரல் கொழுப்பு நோய் கண்டறியப்படுகிறது.
இந்த கல்லீரல் கொழுப்பு நோய் எதனால் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?, இதற்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் உள்ளது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இது குறித்து காவேரி மருத்துவமனையில் தலைமை நுரையீரல் மருத்துவராகவும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணராகவும் உள்ள மருத்துவர் இளன்குமரன் கூறியதாவது
கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் நமது டயட் மற்றும் வாழ்க்கை முறையாகும். டயட் என்று எடுத்துக்கொண்டால் எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், கார்போஹைட்ரேட் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பழங்கள், காய்கறிகளை எடுத்து கொள்ள வேண்டும். கிரீன் டீ, பிளாக் காபி கல்லீரல் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். இதனுடன் சேர்த்து உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்வது அதிக நன்மைகளை அளிக்கும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் பயிற்சி, ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.
இந்த உடற்பயிற்சிகள் கல்லீரல் கொழுப்பை மட்டுமல்ல உடலில் உள்ள கொழுப்பையும் கரைக்க உதவும்.
இந்த நோயால் ஏற்படும் அபாயம் எதுவென்றால் ஆரம்பத்தில் இந்த நோய் எந்த அறிகுறியையும் காட்டாது. அதிகளவு கல்லீரலை பாதித்த பின்னரே இந்த நோய் தெரியவரும்.
கல்லீரல் கொழுப்பு நோய் தெரிய வந்தவுடனேயே டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்து கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
முற்றிய நிலையில் (Advanced stage) கல்லீரல் நோயின் பாதிப்பை அறிந்தால் கல்லீரல் செயல் இழந்து விட்டது என்று அர்த்தம். அதை சரி செய்ய முடியாது.
குணப்படுத்த கூடிய நிலையில் இருந்தால் டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்து கொள்வதன் மூலம் கல்லீரல் கொழுப்பு நோயை குணப்படுத்தலாம்.
இரத்த பரிசோதனை மூலம் இந்த நோயை ஆரம்பத்திலேயே அறிந்து அதற்கேற்ப மருந்துகளை எடுத்து கொள்வதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என்றார்.