ஆறு மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு எந்த இணை உணவுகளை தரலாம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஆறு மாதத்தில் இருந்து ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது ஒரு கலை. பொறுமை, புரிந்துக்கொள்ளும் தன்மை, கொஞ்சம் கலைத்திறன் போன்றவை இருந்தால் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே போரட்டமே இல்லாமல் எளிதில் நன்றாக உணவு அளித்து ஆரோக்கியத்துடன் வளர்க்கலாம்.

ஒரு நாளைக்கு ஒரு புதிய உணவு தான் தரலாம். வீட்டில் சமைக்கும் அனைத்து வகை உணவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக பழக்கப்படுத்தலாம். புது உணவுகளை ஆரம்பிக்கும்பொழுது அதில் உப்பு, இனிப்பு, காரம் போன்ற எதையும் சேர்க்கத்தேவையில்லை.பெரும்பாலும் இனிப்பு சேர்க்கப்படுவதால் பல குழந்தைகள் இனிப்பு சுவைக்கு அடிமையாகின்றன. இதை தவிர்க்க இணை உணவு ஆரம்பிக்கும் காலகட்டத்தில் அந்த உணவின் ஒரிஜினல் சுவையோடு கொடுப்பதே நன்மை பயக்கும். மசித்த காய்கறிகள், கீரைகளும் குழந்தையின் ஏழாவது மாதத்திலிருந்து கொடுக்கலாம்.

வாழை, பப்பாளி, மாம்பழம் போன்ற அனைத்து வகை பழங்கள் நன்கு மசித்து சிறிதளவு ஊட்டலாம்.பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பல பேர் பயப்படுகிறார்கள்.அதில் உண்மை ஏதும் இல்லை.குழந்தைகளுக்கு கண்டிப்பாக பழங்களை ஊட்டலாம்.

எந்த உணவையும் மிக்சியில் அரைத்து ஊட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.அவ்வாறு ஊட்டுவது குழந்தையின் பல் வளர்ச்சியையும் மென்று சாப்பிடும் பழக்கத்தையும் வெகுவாக பாதிக்கிறது. கரண்டியிலோ/மத்தினாலோ/கையாலோ நன்கு பிசைந்து ஊட்டுவதே மிகவும் சரியானது.பல பெற்றோர்கள் “எங்கள் குழந்தை எதையுமே மென்று சாப்பிட விரும்புவதில்லை” என்று கூறுவதிற்கு இதுவே காரணம்.

பிஸ்கட்டை பாலில் மசித்து தருவது சரியான இணை உணவு அல்ல. பெரும்பாலான பெற்றொர்களும் தாத்தா பாட்டிகளும் பிஸ்கட் ஊட்டுவதை ஆரோக்கியம் என்று நம்புகிறார்கள்.ஆனால், பிஸ்க்ட் கொடுப்பதினால் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் அது பசியின்மையை ஏற்படுத்தும். பிஸ்கட் ருசி கண்ட குழந்தை வேறு எந்த உணவையும் எளிதில் ஏற்காது அடம் பிடிக்கும்.

நம் வீட்டில் சமைக்கும் பாரம்பரிய உணவை தருவதற்கு பயப்படும் பெற்றோர்கள் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பிஸ்கட்டுகளை எப்படி நம்புகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது! அதே போல் டின்களில் அடைத்து விற்கப்படும் குழந்தையின் பிரத்தியேக உணவுகள் தர வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. குழந்தை வளர வளர வடை, சப்பாத்தி, பூரி போன்றவையும் பருப்பு/சாம்பார்/தயிர் போன்றவற்றில் நன்கு ஊறவைத்து, மசித்து ஊட்டலாம்.

வேகவைத்து மசித்த சுண்டல் வகைகள், பொரி, அவல், உலர்ந்த திராட்சை, எள்ளுருண்டை, பொடித்த பொட்டுக்டலை/வேர்கடலை, பேரீச்சம்பழம் ஆகிய வகைகள் நல்லதொரு ஸ்நாக்சாகும். அசைவ உணவு வகைகள் குழந்தையின் ஒன்பது (அ) பத்து மாதத்திலிருந்து தர ஆரம்பிக்கலாம்.முட்டையின் மஞ்சள் கரு முதலில் தரலாம். பின்னர் ஒவ்வொரு வகையான அசைவ உணவைத் தொடரலாம்.

“என் குழந்தை வாயில் எதையும் வாங்குவதில்லை, வாயில் வைத்தவுடனே துப்புகிறது” என்று பல தாய்மார்கள் கூறுவார்கள். அதன் அடிப்படை என்னவென்றால் பால் உறிஞ்சி குடித்தக் குழந்தைக்கு உணவை நாக்கை மடித்து உள்செலுத்த இன்னும் பழகவில்லை, புதிய உணவு, புதிய சாப்பிடும் முறை, இவை இரண்டும் பழகுவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனை உணவு ஊட்டுபவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். மேலும் குழந்தை சாப்பிடுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும், இதற்கு தாய்க்கு மிகுந்த பொறுமை அவசியம்.

முற்காலத்தில் அம்மா, பாட்டி உணவு ஊட்டும் பொழுது காக்கா நரிக்கதை, நீதிக்கதைகள் சொல்லி உணவு ஊட்டுவார்கள்.இதனால் சிந்திக்கும் திறன், கவனிக்கும் ஆற்றல், கூடி வாழும் கலை, நற்பண்புகள் ஆகியவை உணவுடன் சேர்த்து ஊட்டப்பட்டது.ஆனால் தற்காலத்தில் மொபைல் / டீவி / லேப்டாப் கார்ட்டூன்கள் காட்டி உணவு கொடுக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது.இதனால் குழந்தைக்கு உணவின் ருசி, அதை சாப்பிடும் முறை போன்றவை தெரியாமலே போகிறது, இதே பழக்கம் வளர்ந்த பின்னும் தொடர்கிறது.இந்த பழக்கத்தால் சிறு குழந்தையிலிருந்தே உடல் பருமன் உண்டாகிறது என்ற உண்மை நிறைய பேர் உணர்வதில்லை.

சாப்பிடும் பொழுது வேறு ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதால் வயிற்றிலிருந்து “ போதும் சாப்பிடுவதை நிறுத்து“ என மூளைக்கு செல்லும் நுண்ணிய சிக்னல் அறியப்படாமலேயே போகிறது, அதனால் சாப்பிடும் அளவு நம்மையறியாமலேயே அதிகரிக்கிறது. இதன் விளைவு உடல் பருமன்.இனை உணவு சாப்பிடும் பொழுது ஏற்பட்ட பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்து பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை” எனும் பழமொழி இதற்கும் பொருந்தும்!!

சத்துணவு நிபுணர்கள் எப்பொழுதும் கூறுவது “சத்தான எந்த உணவை கொடுக்கவேண்டும்” என முடிவு செய்வது தாயின் கடமை.தரப்படும் உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என முடிவு செய்வது குழந்தையின் உரிமை. இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.குழந்தைக்கு பசி இல்லாத பொழுது மற்றும் குழந்தை போதும் என்று சொன்னபிறகு வலுக்கட்டாயமாக ஊட்டினால் வாந்தி எடுக்கும்.இதை தாய்மார்கள் குழந்தைக்கு உணவு பிடிக்கவில்லை அதனால் தான் வாந்தி எடுக்கிறது என்று நினைக்கக்கூடும்.

Related Posts

Leave a Comment

Translate »