குழந்தைகளின் கற்பனை திறனை வளர்க்கும் கதைகள்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குழந்தைகளின் கற்பனை திறனை வளர்க்கும் கதைகள்

குழந்தைகளின் உலகம் முற்றிலும் மாறுபட்டது. பார்க்கும் விஷயங்களையும் கேள்விப்படும் செய்திகளையும் அவர்களது கற்பனை திறனுக்கேற்பவே புரிந்து கொள்வார்கள். அதனால் தான் தாத்தா, பாட்டிகள் வாழ்வியல் நெறிகளை கதைகளின் வடிவில் குழந்தைகளுக்கு சொல்வார்கள். தினமும் கதைகளை கேட்கும் குழந்தைகளின் கற்பனை திறன் நன்றாக வளர்ச்சி பெறுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கதைகளின் மூலம் வாழ்வியலுக்கான நீதி நெறிகளையும் சரியான அணுகுமுறைகள் பற்றியும் அறிந்து கொள்வதால் சிக்கலான சூழ்நிலைகளில் கூட எளிதாக சமாளிக்கும் திறமை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

ஆழமாக மனதில் பதியும்

எந்த விஷயத்தையும் கதைகளில் வடிவில் குழந்தைகளுக்கு சொல்லும் போது எளிதாக நினைவில் நிற்கும். நீதி நெறிகள், பள்ளி பாடங்கள் பொது அறிவு சார்ந்த விஷயங்கள் போன்றவற்றை சுவாரசியமான கதைகளாக கூறினால் ஆழ்மனதில் அழியாமல் பதியும்.

ஒழுக்க நெறிகளை வளர்க்கலாம்.

தங்களுடைய சுதந்திரமான போக்கில் பெரியவர்கள் தலையிட்டு அறிவுரை வழங்குவதை குழந்தைகள் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதனால் அறிவுரைகளையும், ஒழுக்க நெறிகளையும் ஆர்வமூட்டும் வகையில் நன்னெறிக்கதைகளாக சொல்ல வேண்டும். அவர்களது இயல்புக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை அறிந்து அதன் மூலம் நன்னெறிகளை வலியுறுத்தும் கதைகளை கூறுவது குழந்தைகளுக்கு பிடித்தமானதாக அமையும்.

கதை வடிவில் பாடங்கள்

பாட நூல்களில் உள்ள வரலாற்று சம்பவங்களை மதிப்பெண் அடிப்படையில் குழந்தைகள் படிக்கும் போது அவை அவர்களது மனதில் பதிவது இல்லை. பாடங்கள் கதைகளாக உருவகம் செய்து சொல்லும் போது அதன் உள்பொருள் அவர்களது மனக்கண்ணில் காட்சிகளாக விரியும். அதனால் பாடங்களில் உள்ள பெயர்கள் உள்ளிட்ட இதர குறிப்புகள் மனதில் எளிதாக பதிந்து விடும்.

கதைகளால் ஏற்படும் நன்மைகள்

அன்போடு கதைகளை சொல்லும் பெற்றோரிடம் பிள்ளைகளுக்கு பாசப்பிணைப்பு அதிகரிக்கும். கதையில் சொல்லப்பட்ட காட்சிகளை கற்பனை செய்து கொள்வதால் குழந்தைகளின் சிந்தனை திறன் வளரும். அதனால் வளர்ந்த பிறகு எதையும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து செயல்படுவார்கள். கதை கேட்கும் பழக்கம் காரணமாக கைப்பேசி விளையாட்டுகளுக்கு அடிமையாகி உடல் மற்றும் மனஆரோக்கியம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும்.

கதை சொல்லும் முறை

இரவு நேரத்தில் குழந்தைகள் தூங்குவதற்கு முன்னர் கதை சொல்லலாம். அவர்களது வயதுக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து சொல்லி அவற்றிலிருந்து கேள்வி  கேட்பது குழந்தைகளின் கவனத்தை ஒரு முகப்படுத்த உதவும். கதை சொல்லி முடித்த பின் அதன் சாராம்சத்தை அவர்கள் புரிந்து கொண்ட விதத்தில் திரும்பவும் சொல்ல வைத்து பாராட்டலாம். திகிலூட்டும் பேய் கதைகள், மற்றவர்களை தந்திரமாக ஏமாற்றும் கதைகள், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் கதைகளை குழந்தைகளுக்கு சொல்வதை தவிர்க்க வேண்டும்.

Related Posts

Leave a Comment

Translate »