இரண்டு வயதை கடந்த பிறகும் பேச தடுமாறும் குழந்தையை பேச வைப்பது எப்படி?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குழந்தைகளின் மழலை மொழியை ரசிக்காதவர்கள் எவருமில்லை. தங்கள் குழந்தைகளின் கீச்சுக்குரலை சீக்கிரமாகவே கேட்பதற்கு அனைத்து தாய்மார்களும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் சில குழந்தைகள் பேசுவதற்கு தாமதமாகும். ஓரிரு வார்த்தைகளை கூட உச்சரிக்க தடுமாறுவார்கள். இரண்டு வயதை கடந்த பிறகும் கூட பேசுவதற்கு தடுமாறும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அத்தகைய குழந்தைகளை குழந்தை நல நிபுணரிடம் அழைத்து சென்று பரிசோதிப்பதுதான் சரியானது. அவர் குழந்தைகளை பேச வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார். ஒருசில பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் பெற்றோருக்கு வழங்குவார். அவற்றை பின்பற்றுவதுடன் குழந்தைகளை விரைவாக பேச வைப்பதற்கான முயற்சிகளில் பெற்றோர் ஈடுபடலாம். அத்தகைய எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

குழந்தைகள் இரண்டு வயதை கடந்த பிறகும் பேசுவதற்கு ஆயத்தமாகவில்லை என்றால் அவர்களுக்கு எழுத்துக்கள் சரியாக புரியவில்லை என்று அர்த்தம். சில குழந்தைகள் பேசத்தெரியாமலேயே உம்மென்று இருப்பார்கள். ஒருசிலரோ பேசுவதற்கு பயந்துபோய் வார்த்தைகளை உச்சரிக்க முன்வர மாட்டார்கள். ஆனால் பெற்றோர் என்ன பேசுகிறார்களோ அதை அப்படியே உள்வாங்கி நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை எளிதாக பேச வைத்துவிடலாம். பெற்றோர் அவர்களிடம் நன்றாக பேசி பழகினாலே போதுமானது. தங்கள் மீது இருக்கும் பயமும், தயக்கமும்தான் பேசுவதற்கு தடையாக இருப்பதை பெற்றோர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அவர்கள் பேச முற்படும்போதெல்லாம் பெற்றோர் உற்சாகப்படுத்தி பேச வைக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு பொருளின் பெயரையோ, இடத்தையோ உச்சரிக்க சொல்லிக்கொடுக்கும்போது அதனை போட்டோவில் காண்பிப்பதை தவிர்க்க வேண்டும். கூடுமான வரையில் அந்த பொருளை நேரில் காண்பித்து சொல்லிக்கொடுப்பதுதான் சிறந்தது. அத்துடன் அந்த பொருளின் சிறப்பியல்புகள் என்னென்ன? அது எதற்கு உதவுகிறது என்பதையும் விளக்கி கூறலாம்.

பேசுவதற்கு எந்தவித ஆர்வமும் இல்லாமல் இருந்தால் தினமும் ஒரு பொருளின் பெயரை மட்டும் உச்சரிப்பதற்கு பழக்கலாம். அதே பெயரை திரும்ப திரும்ப சொல்லும்போது மனதில் எளிதாக உள்வாங்கிக்கொள்வார்கள். அப்படி மனதில் ஆழமாக பதிந்துவிட்டால் பயமும், தயக்கமும் இன்றி பேசுவதற்கு முயற்சிப்பார்கள்.

ஒருசில வார்த்தைகளை குழந்தைகள் உச்சரிக்க பழகியதும் புகைப்பட வடிவில் இருக்கும் புத்தகத்தில் இருக்கும் பெயரை படங்களுடன் விளக்கி புரியவைக்கலாம். தினமும் காலையில் கற்றுக்கொடுக்கும் விஷயத்தை மாலையில் மீண்டும் சொல்லிக்கொடுக்கலாம். அது சட்டென்று அவர்கள் மனதில் பதிந்து விடும். மேலும் ஒரே வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லியபடி பயிற்சி பெறும்போது எளிதில் மறக்காது. நன்றாக நினைவில் நிலைத்திருக்கும்.

பேச தயங்கும் குழந்தைகளிடத்தில் பாடல் வடிவில் பேச்சுத்திறனை வளர்க்கலாம். பாடல் வரிகளை ராகத்துடன் சொல்லிக்கொடுக்கும்போது ஆர்வமாக வார்த்தைகளை உச்சரிப் பதற்கு பழகிவிடுவார்கள். பாடும்போது உடல் மொழிகளை வெளிப்படுத்தும் விதமும் குழந்தைகளை ரசிக்க வைக்கும் விதமாக இருக்க வேண்டும். அதே பாவனையில் தாங்களும் உடல் அசைவுகளை வெளிப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பாடல் வரிகள் எளிதில் மனதில் பதிந்துவிடும் என்பதால் பேசுவதும் எளிதாகிவிடும்.

சில குழந்தைகள் பேசுவதற்கு வெட்கப்படுவார்கள். குடும்பத்தினர் தவிர மற்றவர்கள் முன்னால் வாயை திறக்கமாட்டார்கள். அவர்களை பேச வைப்பதற்கு எவ்வளவுதான் முயற்சித்தாலும் இசைந்து கொடுக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளை பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாட விடலாம். வெளி இடங்களுக்கு அழைத்து சென்று வரலாம். அங்கு சந்திக்கும் நபர்களிடம் பேச வைக்கலாம். அல்லது அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க வைக்கலாம்.

இப்போதெல்லாம் பச்சிளம் குழந்தைகள் கூட ஸ்மார்ட்போனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறது. அப்படி பிஞ்சு வயதிலேயே ஸ்மார்ட்போனுடன் தொடர்பில் இருக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது தாமதமாகவே பேச தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற தொலை தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டை பெற்றோர் குறைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை தவிர்த்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது அவர்களின் உடல், தகவல்தொடர்பு திறன், அறிவாற்றல் திறனை மேம்படுத்தும்.

குழந்தைகளுடன் இணக்கத்தை வளர்க்கும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். கதை சொல்லும் வழக்கத்தை பின்பற்றலாம். அவை குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்க செய்யும்.

குழந்தைகள் புதிய சொற்களை கற்கும்போது, ஒவ்வொரு முறையும் அவர்களின் உச்சரிப்பில் திருப்தி இல்லாத மன நிலையை வெளிப் படுத்த வேண்டும். அப்போதுதான் மீண்டும் மீண்டும் தங்களுக்குள்ளாகவே அதே வார்த்தையை உச்சரிக்க பழகுவார்கள். பின்பு சரியாக உச்சரிக்க தொடங்கிவிடுவார்கள்.

Related Posts

Leave a Comment

Translate »