அழகு சாதன பொருட்கள் பராமரிப்பில் அவசரம் வேண்டாம்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இளம் பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் ‘ஹேன்ட்பேக்’களில், தேவையான அழகு சாதன பொருட்களை எடுத்துச்செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தேவைப்படும்போது வெளிஇடங்களில் வைத்தும் அவைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் பெருமளவு பெண்கள் தங்கள் ஹேன்ட்பேக்குகளில் உள்ள அழகு சாதன பொருட்களை முறையாக அடுக்கிவைப்பதில்லை. அவைகளை சரியாக பராமரிப்பதும் இல்லை. அழகு சாதன பொருட்களை முறையாக பராமரிப்பதும் ஒரு கலைதான். கடந்த ஆண்டு, தானாக சீராகிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்ப மேக்கப் கிட்கள் அறிமுகமாகியிருக்கின்றன. வெளி நாடுகளில் அறிமுகமாகியிருக்கும் அந்ததொழில்நுட்ப கருவிகள் நமது கைக்கு கிடைக்க இன்னும் சில காலம் ஆகலாம். அதுவரை நாம் பயன்படுத்தும் மேக்கப் கருவிகளை முறையாக பராமரிக்க கற்றுக் கொள்வோமா?. இதோ அதற்கான சில டிப்ஸ்…

மேக்கப் ஸ்பாஞ்ச்

* கவனமாக பராமரிக்கப்பட வேண்டிய பொருட்களில் ‘மேக்கப் ஸ்பாஞ்ச்’ குறிப்பிடத்தக்கது. பஞ்சு போன்றது என்பதால் எளிதில் அழுக்கு மற்றும் கறை படிய வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் சுத்தம் செய்வது எளிதுதான். பவுடர் பூசுதலுக்கான ஸ்பாஞ்ச் என்றால் முதலில் சாதாரண தண்ணீரில் நனைத்துவிட்டு, பின்பு லேசான சுடுதண்ணீரில் அமிழ்த்தி சுத்தம் செய்துவிட்டு உலர்த்தி பயன்படுத்தலாம். அதில் இருக்கும் ஈரத்தை உலர்த்த கடினமாக பிழிய வேண்டாம். உலர்ந்த துண்டு மூலம் ஒற்றி எடுத்தால் ஈரத்தை விரைவில் உலர்த்தலாம்.

* தோல் உறையுடன் கூடிய ஸ்பாஞ்ச் என்றால் அதிக அளவு சுடும் நீரில் அமிழ்த்தக்கூடாது. அதில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டுமானால் சோப்பு தூள் அல்லது ஷாம்பு கலந்த நீரை பயன்படுத்தலாம்.

* இப்படி சுத்தம் செய்தபிறகு, ஸ்பாஞ்சில் உள்ள ஈரத்தன்மை நீங்காமல் இருந்தால் உட்புறத்தில் விரிசல் அல்லது சேதம் இருக்கலாம். அதை கழற்றி சரிபாருங்கள். சேதம் அடைந்திருந்தால் ஸ்பாஞ்சை மாற்றுங்கள்.

பிரஷ்கள்

* இன்று ஏராளமான வகை பிரஷ்கள் பல்வேறுவிதமான மேக்கப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. பிரஷின் தன்மை மற்றும் அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப அவற்றை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக பிரஷ்களை தண்ணீரில் கழுவிவிட்டு, பின்னர் இதமான சுடுதண்ணீரில் கழுவி உலர்த்தி பயன்படுத்தலாம்.

* எல்லா விதமான பிரஷ்களையும் குழாயை திறந்துவிட்டு வேகமாக வெளியேறும் தண்ணீரில் அலசுவது சரியாக இருக்காது. முகத்தில் பயன்படுத்தப்படும் பல பிரஷ்கள், மென்மையானவை. அவற்றை இப்படிச் செய்தால் அதன் தூரிகை முடிகள் உதிர்ந்து, சீக்கிரம் அதன் ஆயுள் முடிந்துவிடும்.

* சிறிய கோப்பையில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு, லேசாக அலம்பினாலே பிரஷ்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். கடினமான கறைகள், பிசுக்குகள், கிரீம்கள் பட்டிருந்தால் மென்மையாக தேய்த்து கழுவவேண்டும். சில வகை கறைகளை நீக்க, குழந்தைகளுக்கான ஷாம்புவை நீரில் கலந்து அதில் பிரஷை முக்கி சுத்தம் செய்யலாம்.

* தலை முடிகளுக்கு பயன்படுத்தப்படும் கடினமான பிரஷை விரல்களால் சுத்தம் செய்வது கடினம். அவற்றை சிறிய வகை சீப்புகள் அல்லது பற்குச்சிகளை பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம். கடினமான அழுக்கு என்றால் ஷாம்பு அல்லது வினிகர் கரைசல் கலந்த தண்ணீரில் சில நிமிடங்கள் அமிழ்த்தி வைத்து பின்பு தண்ணீரில் அலசி சுத்தம் செய்யலாம்.

உலோக கருவிகள்

* இமை முடிகளை சுருள வைக்கும் கருவி, புருவ முடிகளை சீராக்கும் கருவி, நகவெட்டி மற்றும் சரும அழுக்கு நீக்கும் கருவி உள்ளிட்டவற்றை கிருமி நாசினியும், சோப்பும் கலந்த தண்ணீரில் கழுவி பின்பு உலர்த்தி பயன்படுத்தலாம். இப்போது இதற்காக கிருமிகளை நீக்கும் கருவிகளே வந்துவிட்டன. அனைத்து மேக்கப் உபகரணங்களுக்கான ஸ்டெரிலைஸ்டு கருவிகளும் உள்ளன. அவைகளை பயன்படுத்தி பராமரிப்பது சிறப்பானது.

உடைந்துவிடக்கூடியவை

* பவுண்டேசன் பவுடா் மற்றும் புருவமை அடங்கிய பாக்ஸ்கள், லிப்ஸ்டிக் போன்றவைகளை கைப்பையில் சரியாக அடுக்கிவைக்கவேண்டும். கண்டபடி அவைகளை போட்டுவைத்தால், உடைந்து போகலாம். அல்லது பயன்படுத்தும்போது கைதவறுவதாலும் இவை நொறுங்கிப் போகலாம். இப்போது புதிய வரவுகளான கைப்பைகளில் அழகு சாதன பொருட்களை அடுக்கிவைக்கும் வசதிகள் இருக்கின்றன. அவைகளை பார்த்து வாங்கி பயன்படுத்தலாம்.

* லிப்ஸ்டிக் வகைகளை அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டும். கவனக்குறைவால் அது உடைந்துவிட்டால் உடனே அவற்றை வீணாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவைகளை பாதுகாத்து பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.

* எரியும் அடுப்பின் அருகில் லேசான வெப்பத்தில் இரு நுனிகளையும் காட்டுங்கள். அவை இளகும் தன்மை அடைந்தவுடன் அவற்றை இணைத்துப்பாருங்கள். அவை ஒட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

* ஒருவேளை அப்படி ஒட்டிக் கொள்ளாவிட்டால், உடைந்த துண்டுகளை, சிறுகரண்டியில் வைத்து வெப்பத்தில் வாட்டுங்கள். சிறிது நேரத்தில் அது இளகிவிடும். பின்பு அதை சிறிய குப்பியில் வைத்து பிரிட்ஜ் பிரீஸரில் வைக்கலாம். அது உலர்ந்தவுடன் எடுத்து பயன்படுத்தலாம்.

அழகு சாதன பொருட்களில் பெரும்பாலானவை விலை உயர்ந்ததாகவே இருக்கின்றன. அவைகளை வாங்குபவர்கள் சரியாக பாதுகாத்து, பராமரித்து பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அதனால் பெரும் பண இழப்பு ஏற்பட்டுவிடும்.

Visits: 4

Related Posts

Leave a Comment

Translate »