கருச்சிதைவிற்கு பிறகு கவனத்தில் கொள்ள வேண்டியவை

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தாய்மையை எதிர்கொண்டு கருவை சுமக்கும் பெண்களுக்கு சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக கருச்சிதைவு நிகழ்ந்துவிடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15.6 மில்லியன் கருச்சிதைவுகள் நடைபெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் தினமும் 10 பெண்கள் பாதுகாப்பற்ற கருச்சிதைவு காரணமாக இறக்கும் அபாயமும் இருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் நோய் பாதிப்புகளையும் எதிர்கொள்கிறார்கள்.

குழந்தையை இழந்ததை நினைத்து மன வேதனைக்கு ஆளாகிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானது. கருச்சிதைவின் போது அதிக ரத்தப்போக்கு, இரும்பு சத்து இழப்பு, வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்ய உணவு பழக்கவழக்கத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

 * புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது அவசியம். அவை ரத்த செல்களை அதிகரிக்கச் செய்யும். அவித்த முட்டை, மீன், அவகொடா, பாலாடை, பட்டாணி, ஆரஞ்சு, கேரட், பச்சை இலை காய்கறிகள், வாழைப்பழம், பாதாம் போன்றவற்றில் புரதம் அதிகம் கலந்திருக்கும்.

* எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. முள்ளங்கி, முலாம்பழம், ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிடக் கூடாது. சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

* மீன், கோழி இறைச்சி, முட்டை, ஆட்டு இறைச்சி, ஈரல், பழங்கள், காய்கறிகளை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்கள், மீன், கோழி, ஆட்டு இறைச்சி ஆகியவற்றை விரும்பி சாப்பிடலாம். இவற்றுள் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி நிறைந்திருக்கிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

* குறைந்த அளவு கொழுப்பு கொண்ட பால் பொருட்களை உட்கொள்ளலாம். அவற்றின் மூலம் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெறலாம். புரதம், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்திருக்கும்.

* காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இறைச்சி உணவுகளிலும் அதிகம் காரம் சேர்க்கக்கூடாது.

* கருச்சிதைவிற்கு பிறகு, அதிகமாக வியர்வை வெளியேறக்கூடும். நீரிழப்பும் ஏற்படும். அதனை தவிர்க்க தினமும் 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கும், உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் வெதுவெதுப்பான நீரை உட்கொள்ளலாம்.

* உலர்ந்த பழங்கள், இஞ்சி, பூண்டு, எள், பால் ஆகியவற்றை உட்கொள்ளலாம். கருச்சிதைவு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், உடல் நிலையை மோசமாக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ‘ஜங்க் புட்ஸ்’, சர்க்கரை சார்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும். அத்துடன் உருளைக்கிழங்கு, சுரைக்காய் போன்ற உடலை குளிர்விக்கக் கூடிய உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

* துணி துவைத்தல், தண்ணீர் வாளிகளைத் தூக்குதல் போன்ற எடை தூக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

* கருச்சிதைவுக்குப் பின் ஏற்படும் வலி அல்லது பிடிப்பை குறைக்க சூடான கடுகு அல்லது எள் எண்ணெய்யை தடவலாம். அத்துடன் உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கு, கை, கால்கள், உள்ளங்கைகளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்.

* கருச்சிதைவுக்குப் பிறகு, உடலில் பிடிப்புகள் இருக்கலாம். ‘ஹாட் பேக்’ எனப்படும் சாதனத்தை பயன்படுத்துவது வலியை குறைக்க உதவும்.

* கருச்சிதைவுக்கு பின்பு உணர்ச்சிவசப்பட்ட மனச்சோர்வை அனுபவிக்கக்கூடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆறுதல், மனச்சோர்வை குறைக்க உதவும்.

* மருத்துவரின் ஆலோசனையின்படி உடலில் ஆற்றலை மீட்டெடுக்க உதவும் இரும்பு, கால்சியம் மற்றும் பிற அடிப்படை வைட்டமின்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* மரபணு பிரச்சினைகளால் கருவில் ஏற்படும் குறைபாடு, கர்ப்பப்பையில் ஏற்படும் சில குறைபாடுகள், தாய்க்கு நோய் பாதிப்பு ஏற்படுதல், அதிக உடல் எடை, நீண்ட தூர பயணம், அடிக்கடி பயணம் செய்தல், அளவுக்கு அதிகமான டென்ஷன், மன அழுத்தம் போன்ற காரணங்களால் கர்ப்பம் தானாகவே கலையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

* கருச்சிதைவுக்கு பிறகு அடுத்த கர்ப்பத்திற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இடைவெளி தேவை. இது ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். கருப்பையில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும் வழிவகுக்கும்.

* ரத்த இழப்பு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, மாதவிடாய் சுழற்சி தாமதமாகலாம். உடல் நலத்தை கவனித்துக்கொள்வதை பொறுத்து மாதவிடாய் சுழற்சி அமையும். சிலருக்கு கருச்சிதைவுக்கு 2-3 மாதங்களுக்கு பிறகு மாதவிடாய் சுழற்சி தொடங்கலாம். எனவே பீதி அடையவேண்டாம். மிகவும் காலதாமதமானால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

* உடல் நலத்தை பேணுவதற்கு வழக்கமான பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ளுங்கள். கருச்சிதைவு என்பது வேதனை தரும் விஷயம். அதனை தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவது அவசியமானது.

Related Posts

Leave a Comment

Translate »