Signs-that-childbirth-is-imminent_பிரசவம் நடக்கப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

பிரசவம் நடக்கப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சிலருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் எதிர்பார்த்தால், பிரசவத்தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்து சேரச் சொல்லலாம். உடனடியாக பிரசவம் இருக்கும் என்று நினைத்தாலும்,  மருத்துவமனையிலிருந்து வீடு அதிக தொலைவில் உள்ளது என்றாலும், பிரசவத் தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனையில் சேரச் சொல்லலாம்.

‘மழை எப்போது பெய்யும்; மகப்பேறு எப்போது நிகழும் என்பது அந்த மகேசனுக்கே தெரியும்’ என்று கிராமங்களில் ஒரு வழக்கு சொல்வதுண்டு. பிரசவம் ஆவதற்கு இந்த நாள், இந்த கிழமை, இத்தனை மணிக்கு என்று யாராலும் குறிப்பாகச் சொல்ல முடியாது என்பதைத்தான் இது வலியுறுத்துகிறது. உண்மையும் இதுதான்.

மகப்பேறு மருத்துவர்கள் சொல்லும் பிரசவத் தேதிகூட கர்ப்பிணிக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாக வைத்துக் குறிக்கப்படும் ஓர் உத்தேசக் கணக்குதான். ஆனாலும் பிரசவம் குறித்து கர்ப்பிணிக்கு எச்சரிக்கை தருவதற்கு உடலில் இயற்கையாகவே, சில அலார ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அவற்றில் பிரசவ வலியும் ஷோ(Show) எனப்படும் நிகழ்வும் பனிக்குடம் உடைவதும் முக்கியமானவை.

பிரசவ வலியில் பொய் வலி, உண்மையான வலி என இரண்டு வகைஉண்டு. அவற்றைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். கருப்பை சுருங்கி விரிவதால்தான் பிரசவ வலி ஏற்படுகிறது. இடுப்பில் மேலேயிருந்து கீழாக மின்னல் ஒன்று தாக்குவது போல் விட்டுவிட்டு இந்த வலி ஆரம்பிக்கும். 10 நிமிடம், 20 நிமிடம் என்ற இடைவெளியில்தான் இந்த வலி ஏற்படும். அப்படி ஏற்படும் கால இடைவெளியைக் கொண்டு உண்மையான பிரசவ வலியா, பொய் வலியா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஒருமுறை வலி தொடங்கி, அடுத்தமுறை வலி ஆரம்பிக்கும் இடைவெளி ஒரே சீராக இருந்து, வலி மட்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றால், அது உண்மையான பிரசவ வலி. அடுத்த பிரசவ அலாரம் இது: சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பிலிருந்து கசியும். இதுதான் ‘ஷோ’! கருப்பையின் வாய்ப் பகுதியான செர்விக்ஸ் திறக்க ஆரம்பித்துவிட்டது என்பதைக் குறிக்கும் அறிகுறி இது.

மூன்றாவது அலாரம் பனிக்குடம் உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறுவது. கருப்பையிலிருந்து குழந்தை இறங்கத் தொடங்கியதும், குழந்தையைச் சுற்றியுள்ள பலூன் போன்ற பனிக்குடமும் பிதுங்கலாக இறங்குகிறது.

அப்போது பிதுங்கிய ஒரு பகுதி உடைந்துபோகும். இதனால் இளநீர் போன்று பனிக்குட நீர் பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும். இந்த உண்மை தெரியாத சில கர்ப்பிணிகள், தங்களுக்கு சிறுநீர்தான் கட்டுப்படாமல் வெளியேறுகிறது என்று தவறாகப் புரிந்துகொள்வதும் உண்டு.

மேற்சொன்ன 3 அலாரங்களில் எது ஏற்பட்டாலும் மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். முக்கியமாக, வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பனிக்குட நீர் வெளியேறிவிட்டது என்றால், எந்த தாமதமும் இல்லாமல், உடனே மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். பனிக்குட நீர் இளநீர் பதத்தில் இல்லாமல், மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால், உள்ளே குழந்தை மலம் கழித்து இருக்கிறது என்று பொருள். இப்போது இன்னும் சீக்கிரமாகக் கிளம்பிவிட வேண்டும்.

Related Posts

Leave a Comment

Translate »