இளம் தாய்மார்கள் என்னதான் தங்கள் குழந்தைக்குக் கொடுக்கவேண்டிய உணவுகள் பற்றி படித்தும் கேட்டும் அறிந்திருந்தாலும், திடீர் சந்தேகங்களும் குழப்பங்களும் அடிக்கடி ஏற்படும். என்ன உணவை எப்படிக் கொடுக்கலாம்? இது கொடுத்தால் குழந்தையின் உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா என்ற பதற்றம் இருக்கும். பிறந்த நாள் முதல் ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தவிர்க்க வேண்டியவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
படுத்துக்கொண்டே பால் கொடுப்பது தவறு. அது குழந்தைக்கு மிகவும் ஆபத்து.
சில சமயங்களில் உணவின் கலப்படத்தாலோ, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவினாலோ குழந்தைக்கு ஒவ்வாமை உண்டாகி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்குத் தாய்ப்பாலிலேயே பாதி குணமாகிவிடும். அது மட்டுமின்றி, ORS எனப்படும் ( oral rehydration solution / உப்பு சத்து குடிநீர்) என்று சொல்லப்படும் மருந்தினைக் கொடுக்கலாம். இவை கிடைக்காதபட்சத்தில், 200 மில்லி தண்ணீரைக் கொதிக்கவைத்து ஆறியவுடன், அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் ஒரு சிட்டிகை உப்பும் கலந்து 50 மில்லியாகக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளைக் குளிக்க வைக்கும்போது கண்களை மூடுதல் போன்றவை செய்யக் கூடாது.
குழந்தைகளுக்கு பவுடர் போடுவது, மை வைப்பது, சாம்பூராணி காட்டுவது போன்றவை, நுரையீரல் பிரச்னையை ஏற்படுத்தும். சிலருக்கு நிமோனியா, ஆஸ்துமா போன்றவையும் ஏற்படலாம்.
பிறந்த குழந்தைக்கு பசும் பால் கொடுக்கக் கூடாது. குழந்தைக்கு ஜீரணமாகாமல் ஒவ்வாமை ஏற்படும். ஒரு வயத்துக்குப் பிறகுதான் பசும் பால் கொடுக்க வேண்டும்.
உணவை மிகவும் குளிர்ச்சியாகவோ, சூடாகவோ கொடுக்கக் கூடாது. மிதமான நிலையில் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழங்களைச் சுடுநீரில் சுத்தமாகக் கழுவி கொடுக்க வேண்டும். ஃப்ரிஜில் வைக்கப்பட்ட உணவுகளைக் கொடுக்கவே கூடாது.
ஒரு குழந்தைக்கு சிறு வயதில் கொடுக்கும் உணவுதான், ஆயுள் முழுவதும் சத்தாகத் தொடரும். நாம் தினமும் குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளைக் கொடுத்து வந்தாலே, பிற்காலத்தில் மருந்து, மாத்திரை போன்றவை தேவைப்படாது.