தொழில் நுட்ப வளர்ச்சி பெற்ற இன்றைய உலகில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அதிக அளவில் தொழில் முனைவோராக அவதாரம் எடுத்து வருகிறார்கள். அதில் ஆண்களை விட பெண்கள் சந்திக்கும் சவால்களே அதிகம். அதற்கான தீர்வுகள் பற்றி இங்கே பார்ப்போம்.
தொழில் முனைவோராக வெற்றி பெற வேண்டுமானால் முதலில் வாடிக்கையாளர்கள், தொழில் துறை நண்பர்கள் என்று சமுதாயம் சார்ந்த வட்டாரத்தை விரிவுபடுத்துவது அவசியம். ஆனால் பல பெண்கள் தங்களை தாங்களே பாதுகாப்பு வளையத்திற்குள் அடைத்து கொள்வதால் அதை தாண்டி இதர விஷயங்களில் கவனம் செலுத்த தவறுகிறார்கள். வெகு சிலர் மட்டுமே அந்த வளையத்தை விட்டு வெளியேறி சமுதாயத்தை அணுகி வெற்றி பெறுகிறார்கள்.
தொழில் சிறியதோ, பெரியதோ அதற்கான முதலீடு என்பது மிக முக்கியம். ஆனால் பல பெண்களுக்கு முதலீடு செய்வதற்கான பண வசதி அல்லது உதவிகள் கிடைப்பதில்லை. எனவே வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கான வழிகள் மற்றும் அரசு திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதி உதவியை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வது அவசியம்.
குடும்பம், தொழில் என இரண்டு விஷங்களையும் சமமாக கவனிக்க வேண்டிய அவசியம் பெண் தொழில் முனைவோருக்கு உள்ளது. பெரும்பாலான பெண்கள் குடும்ப உறவுகள் இதை சார்ந்த விஷயங்கள் என்று குடும்பத்தின் பாசப்பிணைப்புக்குள் தங்களை முடக்கி கொள்கிறார்கள். குடும்பமா, தொழிலா என்ற நிலையில் குடும்பம் தான் இறுதியில் வெற்றி பெறுகிறது. அதனால் பலரும் தொழிலை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். எனவே தன்னம்பிக்கையோடு குடும்பத்தையும் தொழிலையும் சமன் செய்து கொண்டு செல்லும் திறமையை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமுதாயத்தில் அதிகரித்து வருகின்றன. எனவே எந்த ஒரு சூழலிலும் மற்றவர்களின் உதவிக்காக காத்திருக்காமல் தங்களை தற்காத்துத்கொள்ளும் திறன் ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.
வெற்றி என்ற எண்ணம் மட்டுமே நம்மை உயர்த்திவிடாது. வளர்ச்சிக்கான பாதையில் கிடக்கும் தடைகளை அகற்றி விட்டு தயக்கங்களை விரட்டி அடுத்த அடியை எடுத்து வைத்தால் மட்டுமே நம்மால் இலக்கை அடைய முடியும்.