தொழில் முனைவோர் கீழ்க்கண்ட குணநலன்களைப் பெற்றிருத்தல் அவசியம். தாங்கள் ஒரு தொழிலை நிறுவி வெற்றி பெறச்செய்யும் சாதனையில் ஈடுபட்டிருகிறோம் என்ற எண்ணம் மனதின் அடிதளத்தில் இருக்க வேண்டும். தொழிலை தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற தனியாத தாகம் வேண்டும். மனதில் உறுதி இருக்க வேண்டும்.
முன் வைத்த கால் பின்வைக்காதே என்பதை மனதில் கொள்ள வண்டும். தொழிலின் தொடக்க காலத்தில் பல தடைகளை எதிர்கொள்ள நேரிடும். அச்சமயங்களில் மனம் தளராத உறுதி கொள்ள வேண்டும். தொடங்கும் தொழில் வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை. எல்லா தொழிலிலும் பொதுமக்களுடன் நெருங்கிப்பழகும் அவசியம் ஏற்படும். ஆகவே, தொழில் முனைவோர் பொதுமக்களிடம் சிரித்து பழகுகிற பழக்கத்தையும், குணத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பாக ஏற்கனவே தொழில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரும்பி பழக வேண்டும்.
எந்த தொழில் அமைப்பானாலும் அதன் தலைமை நிர்வாகி முக்கியமானவர். நமக்கு பொருள் விற்பவர்கள் பலர் கூட்டாக ஈடுபடுகின்றனர். அவர்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்தி செல்கிற அறிவும் திறனும் வேண்டும். புகை வண்டியின் வேகம், அதன் என்ஜினின் வேகத்தைப் பொறுத்தது என்பதை மனதில் கொள்ளுங்கள். தொழில் தொடங்கி நடத்தும்போது சிறு தொழிலாகப் பதிவு செய்தல், பஞ்சாயத்து, நகராட்சி போன்றவற்றின் அனுமதி பெறுதல், வங்கிக்கடன் பெறுதல், மின் இணைப்புப் பெறுதல், விற்பனை வரி பதிவு செய்தல், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறுதல் போன்ற பல அரசு அனுமதிகளைப் பெற, வேண்டியவற்றை தாமதமின்றி செய்ய வேண்டும். இந்த முயற்சியில் பல நேரங்களில் சத்திய சோதனை வரும். அப்போது நேர்மைக்காகப் போராட வேண்டும் என்பதை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு காரியத்தில் கண்ணாய் இருக்க வேண்டும்.
தொழில் நடத்தும்போது பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். தரமான பொருள்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்தல், ஊழியருக்கு நியாயமான ஊதியம் வழங்குதல், அரசு விதிகளை நிறைவேற்றுதல், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துதல், வரி செலுத்துதல் போன்ற பல பொறுப்புகளை விரும்பி நிறைவேற்ற வேண்டும்.
தொழில் முனைவோர் காலநேரம் பாராது கடினமாக உழைக்க வேண்டும். காரியம் கை கூடும் வரை மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது உழைத்திட வேண்டும். தொழில் உலகம், கடல் போல் பரந்துபட்ட ஒன்று. இதில் நாள்தோறும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. சிறந்த முடிவுகளை தேவையானவர்களுடன் மற்றும் அது தொடர்பான அனுபவம் மிக்கவர்களுடன் அல்லது நாமே உடனுக்குடன் எடுக்க வேண்டும். தாமதம் செய்யும்போது மற்றவர்கள் நம்மை முந்திவிட வாய்ப்புண்டு.