நல்லி எலும்பு இலக்கியச் சுவையில் இருந்தது. செயல்முறைக்கு வருவோம். உதாரணத்துக்கு அரை கிலோவிலிருந்து முக்கால் கிலோ சதை ஒட்டிக்கொண்டிருக்கிற பதமான நல்லி எலும்பாக பார்த்து வாங்குங்கள். நன்கு கழுவி குக்கரில் போட்டு கொஞ்சம் மஞ்சள் தூள், சிறிது கறிவேப்பிலை, கொஞ்சம் சின்ன வெங்காயம், கொஞ்சம் பூண்டு இஞ்சி நசுக்கி போட்டு குக்கரை மூடி ஒன்றரை டம்பளர் தண்ணீர் விட்டு 6 அல்லது 7 விசில் விடவும்.
இன்னொரு வாணலியில், கொஞ்சம் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு , 4 மிளகாய் , ஒரு ஸ்பூன் சீரகம் , கொஞ்சம் சோம்பு ,ஒரு பட்டை , இலவங்கம் , கசகசா, சின்ன வெங்காயம் இவைகளை வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் பண்ணி கொள்ளவும்.
சிறிது எண்ணெய் விட்டு கடாயில் கறிவேப்பிலை, கட் செய்த பெரிய வெங்காயம் போட்டு அரைத்த கிரேவியை அதனுள் விட்டு , தேவைப்பட்டால் ஒரு பெரிய தக்காளி , (தக்காளி தேவையில்லை எனினும் அது ஒரு சுவை) வெந்து தணிந்த நல்லி எலும்பை அதன் சாரோடு அதில் கலந்து தேவையான அளவு உப்பையும் போட்டு 5 அல்லது 7 நிமிடம் கொதிக்கவைத்து கண்ணுக்கு அழகான., பார்க்க பரவசமூட்டும் வாசத்தோடு இப்போது வயிற்றுக்கான நல்ல இலக்கியம் நல்லி கிரேவி தயார். இறக்கிவைக்க,தெருவே கறிவாசம் சொந்தம் கொண்டாடும்.
பசி மயக்கம் ” வயிற்றாற்று படை” எழுதும். நல்ல உணவு செய்து, நட்போடும், உறவோடும் உண்ண, கருணை கொண்ட உள்ளம் விருந்தோம்பலில் மயங்கும்.